இசைஞானி இளையராஜாவின் 75வது பிறந்தநாள் நிகழ்ச்சி சேலம் அயோத்தியாபட்டணம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்சியில் கலந்து கொண்ட இளையராஜா கல்லூரி மாணவர்கள் மத்தியில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார்.
இதனையடுத்து, இளையராஜா தனது அனுபவங்களை பற்றி மாணவர்களிடம் பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கேள்விக்கு இளையராஜா பதிலளித்தார். அப்போது, தான் இசையமைத்ததில் கரகாட்டக்காரன் படத்தில் உள்ள மாங்குயிலே பூங்குயிலே பாடலுக்கு மிகக்குறைந்த நேரத்தில் இசையமைத்தாக தெரிவித்தார். மேலும், உதயகீதம் படத்தில் வரும் பாடும் நிலாவே பாடலுக்கு அதிகநேரம் எடுத்துக்கொண்டதாக தெரிவித்தார்.
தான் இசையமைத்த பாடல்கள் ஆரம்ப காலம் முதல் இன்று வரை ஒரே மாதிரிதான் உள்ளது என்றும், வேறுபாடு எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார். ஒரே மாதிரியான ஸ்வரங்களை ஒவ்வொரு இசையமைப்பாளர்கள் பல்வேறு விதமான பாடல்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிட்ட இளையராஜா, சிந்தனை உள்ள இசையமைப்பாளர்களுக்கு இதுபோன்று பாடல்கள் வரும். சிந்தனை இல்லாதவர்கள் காப்பி மட்டுமே அடிக்க வேண்டும், காப்பி அடிப்பதிலேயே அவர்களது காலம் சென்றுவிடும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசும்போது, நான் முதல் படத்திற்கு வாங்கிய சம்பளம் 5 ஆயிரம் ரூபாய் என்றும், அப்போது கிடைத்த மகிழ்ச்சி தற்போது 7 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியும் கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார். மேலும், பறை இசை, வில்லுப்பாடல் உள்ளிட்ட பாரம்பரிய இசையை பாதுகாக்க வேண்டும் என்றால், அதற்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். பாரம்பரிய இசைக் கலைஞர்கள், அடுத்த தலைமுறையினருக்கு பாரம்பரிய இசையை கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் அதை அழிவிலிருந்து காக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.