தமிழக மாணவர்களுக்கு எதிராக சர்ச்சை கருத்து கூறியதாக எழுந்த கண்டனத்திற்கு நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

சினிமாவை தொடர்ந்து தற்போது நேரடி அரசியலில் இறங்கியுள்ள நடிகர் பிரகாஷ் ராஜ், மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்டார். தற்போது ஆம் ஆத்மி கட்சிக்காக டெல்லியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ், டெல்லி மாணவர்களின் உரிமையை தமிழக மாணவர்கள் தட்டிப் பறிப்பதாக பிரகாஷ் கூறியதாக செய்திகள் வெளியாகின.

இதற்கு சமூக வலைதளங்களில் தமிழர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து டெல்லி தமிழ் மாணவர் சங்கத்தலைவர் சரவண ராகுல் கூறியபோது, “பிரகாஷ்ராஜ் தமிழ் மாணவர்களுக்கு ஆதரவாக பேசாமல் இருந்தால் கூட பரவாயில்லை, கல்வி கற்கும் மாணவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேசியதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்த நிலையில், இந்த சர்ச்சை பேச்சுக்கு தனது ட்விட்டரில் விளக்கமளித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், “நான் அப்படிப்பட்ட கருத்தைக் கூறவே இல்லை. நான் பேசியதை வேண்டுமென்றே தவறாக யாரோ சித்தரித்துள்ளனர். இப்படி செய்தவர்களை நினைத்தால் வெட்கமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ராஜின் பேச்சை கண்டித்து, தமிழ் திரைப்பட பாதுகாப்பு கழக தலைவரும், தயாரிப்பாளருமான கே.ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கர்நாடகாவில் பிறந்த பிரகாஷ் ராஜை கன்னட சினிமா கைவிட்ட போது, கைகொடுத்து உதவியது தமிழ் திரையுலக இயக்குனர் கே பாலச்சந்தர். தற்போது வரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

இதனால் தமிழக நடிகர்கள் பலரின் வில்லன் கதாபாத்திர வாய்ப்பு பறிபோய் உள்ளது. ஆனால் பிரகாஷ் ராஜ் தமிழ் பட வாய்ப்பின் மூலம் பொருளும், புகழும் நன்றாக சம்பாதித்துள்ளார். வட மாநிலத்தவர்கள் இங்கு வேலை பார்ப்பதால், தமிழர்களின் வேலை வாய்ப்பு குறைந்துள்ளது. பலர் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர்.

இப்படி இருக்க பிரகாஷ் ராஜ் இப்படி நன்றி மறந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. அவர் மன்னிப்பு கேட்கும் வரை தமிழ் படங்களில் நடிக்கவிட மாட்டோம். அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம்” என பேசியுள்ளார்.