ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான ஊழல் வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சராக முன்பு ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியாவில் வெளிநாட்டு நிறுவனம் ஒன்று ரூ.305 கோடி முதலீடு செய்ய அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரிய ஒப்புதலை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக சிபிஐ கடந்த 2017 ம் ஆண்டு மே மாதம் ப.சிதம்பரம் ,கார்த்தி சிதம்பரம், இந்திராணி முகர்ஜி ,ஐ.என்.எக்ஸ். மீடியா இயக்குனர்கள் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.
இதை அடிப்படையாகக் கொண்டு, அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது.
முன்னதாக இந்த வழக்கு விசாரணை கடந்த நவம்பர் மாதம் விசாரணைக்கு வந்த போது ப. சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையையும் ஜனவரி 15ஆம் தேதி வரை நீட்டித்தும், இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுருந்தார்.
மேலும், விசாரணை அமைப்புகளுக்கு ப.சிதம்பரம் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தில்லி உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதனையடுத்து நேற்றைய வழக்கு விசாரணைக்குப் பின் ப.சிதம்பரத்தை கைது செய்வதற்கான தடையை பிப்ரவரி 1 ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது . மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தது நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.