தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சனிக்கிழமை நிருபர்கள் சந்திப்பை தனக்கு இணக்கமான ஊடகத்தை மட்டும் அழைத்து நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கொரோனா பாதிப்பு குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு தினமும் மாலை 6 மணியளவில் நிருபர்களுக்குப் பேட்டியளித்து வருகிறது. இந்த பத்திரிகையாளர் சந்திப்புகளை ஆரம்ப நாட்களில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்னெடுத்து வந்தார்.
பின்னர் கொரோனா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்புகளைச முதல்வர் பழனிச்சாமி சில நாட்கள் நடத்தினார். அடுத்து சுகாதாரத்துறைச் செயலாலர் பீலா ராஜேஷ், அதற்கடுத்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சண்முகம் என்று மாறிமாறி பேட்டி அளித்தனர். இவர்கள் பேட்டியளிக்க காரணம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கும் இடையே அரசியல் அதிகார மோதல் எனக் கூறப்பட்டது.
இந்நிலையில் ரேபிட் டெஸ்ட் கருவிகள் சர்ச்சை, எண்ணிக்கையை ஏன் அதிகரிக்கவில்லை, கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு கொரோனா வருகிறதா என்பன போன்ற பல்வேறு சர்ச்சைகளுக்கு சுகாதாரத்துறை பதிலளிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நகர்த்தப்பட்டது.
மேலே குறிப்பிடப்பட்ட கேள்விகள் அனைத்து தரப்பிலிருந்தும் எழுந்த வேளையில் சுகாதாரத்துறை பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்தவில்லை. பதிலாகப் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த எண்ணிக்கையை மட்டும் பத்திரிகைகளுக்கு இணையத்தில் தெரிவித்து வந்தது.
மேலும் வாசிக்க: அரசின் அறிவிப்பால் மின் கட்டணம் இருமடங்கு உயரும் அபாயம்- வேதனையில் மக்கள்
இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் சனிக்கிழமை பத்திரிகையாளர்களைச் சந்தித்து கொரோனா தொடர்பாகப் பேட்டி அளித்தார். இந்த பேட்டிக்காக ஆளும் கட்சியின் செய்தி சேனலான நியூஸ் ஜே உள்பட சில செய்தி சேனல்களே அழைக்கப்பட்டிருந்தது. சந்திப்பிற்குச் சென்ற செய்தி சேனல்கள் அனைத்தும் அமைச்சர்களிடம் முறையான கேள்விகள் எதையும் எழுப்பவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே சம்பந்தப்பட்ட பத்திரிகை சேனல்களும் அமைச்சர் பேட்டி குறித்து சக நிருபர்களுக்குத் தெரிவிக்கவில்லை. இதுகுறித்து சுகாதாரத் துறையின் வாட்ஸ் ஆப் குழுவில் நிருபர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிய போதும் அதிகாரிகள், அமைச்சரிடமிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.
கொரோனாவை வைத்து இப்போதைய நேரத்தில் அதிமுக அரசு அரசியல் செய்கிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வரும் சூழலில், அமைச்சரின் நடவடிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இனிவரும் நாட்களில் இந்த நடைமுறை மாற்றப்படுமா என்ற கேள்விக்கும் அமைச்சர் தரப்பிலிருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.