வன்முறையை தூண்டும் விதத்தில் கருத்துகளை தொடர்ந்து பதிவிட்டு வந்ததால், டிரம்பின் டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்படுவதாக ட்விட்டர் நிர்வாகம் அதிரடியாக அறிவித்து உள்ளது.
கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். வரும் 20 ஆம் தேதி அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.
அவரது வெற்றியை ஏற்க மறுத்த டிரம்ப், அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோக்களை தனது பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் வகையில் சான்றிதழ் அளிக்கும் நிகழ்ச்சி நடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போது மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டது. பாதுகாப்பு படையினருக்கும் டிரம்ப் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நிலைமையை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 4 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து தற்போது அதிபராக உள்ள டிரம்ப், வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டதாக கூறி அவரது ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வருவதால் அவரின் தனிப்பட்ட முறையிலான ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து @POTUS என்ற அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ கணக்கில் இருந்து டிரம்ப் டிவீட் செய்தார். அந்த பதிவுகளையும் ட்விட்டர் நிறுவனம் நீக்கியது. இதனையடுத்து அதிபர் டிரம்ப், ட்விட்டர் நிறுவனம் பேச்சு சுதந்திரத்தை தடை செய்வதாகவும், தன்னை பேசாமல் அமைதியாக இருக்கச் செய்வதற்காக தனது கணக்கை நீக்கியிருப்பதாக குற்றம் சாட்டினார்.
ட்விட்டர் ஊழியர்கள் ஜனநாயக கட்சி மற்றும் தீவிர இடதுசாரிகளுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். அமெரிக்க அதிபரின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது உலக வரலாற்றில் இதுவே முதன்முறையாகும்.
டிரம்பின் பேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கம்