அயோத்தி நிலம் தொடர்பான பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என சமரச குழு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, அது தனது விசாரணை தொடர ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.
 
அதில் மனுதாரர்கள் சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் நிலத்தை பிரித்துக்கொள்ள நீதிமன்றம் யோசனை வழங்கியது. ஆனால், தீர்ப்பை எதிர்த்து 3 தரப்பினர் உட்பட உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
 
இந்த வழக்குகளை முன்னதாக தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது. பின்னர், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்விற்கு மாற்றப்பட்டது.
 
அதில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண், அப்துல் நசீர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
 
கடந்த மார்ச் 8ம் தேதி இவர்கள் பிறப்பித்த உத்தரவில், நிலப் பிரச்னைக்கு தீர்வு காண்பது பற்றி வழக்கில் சம்பந்தப்பட்ட குழுக்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி எப்.எம்.கலிபுல்லா தலைமையில் 3 பேர் அடங்கிய நடுநிலை குழுவை அமைத்தது.
 
இதில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ரவிசங்கர், வழக்கறிஞர் ராம் பஞ்சு ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு தனது விசாரணையின் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
 
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடுநிலை குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதத்தில், “அயோத்தி நிலப் பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
 
அதனால், நீண்ட கால பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என நாங்கள் எதிர்பார்கிறோம். மேலும், இதுவரை இக்குழுவால் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
 
அதை நீதிமன்றம் பரிசீலனை செய்துக் கொள்ளலாம். இதில், வழக்கு தொடர்பாக 30 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட விவரங்களில் மொழிமாற்றுப் பிரச்னை உள்ளது. அதனால், மேற்கொண்டு விசாரணை நடத்த நீதிமன்றம் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்,’’ என்றுக கேட்டுக் கொண்டார்.
 
இதன் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு விவகாரத்தில் இருதரப்பிலும் இருக்கும் பிரச்னையையும் பேசி தீர்க்க, நடுநிலையாளர் குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுகிறது.
 
இந்த இடைப்பட்ட காலக்கட்டத்தில் வழக்கு தொடர்பான அனைத்து சமரசத்தையும் இக்குழு விசாரித்து முடிக்க வேண்டும். மேலும், இதுதொடர்பான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்பது திருப்தியான ஒன்றாக உள்ளது,’’ என்றனர்.