சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சரவணபவன் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட் உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
முதலில் ஓட்டல்களுக்கு ஜிஎஸ்டி அதிகளவாக 18 சதவீதம் விதிக்கப்பட்டது.பிறகு பொதுமக்கள் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதால் மத்திய அரசு ஓட்டல்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி பாதியாக குறைக்கப்பட்டது.
 
சில ஓட்டல்கள் பழைய ஜிஎஸ்டி வரி விதிப்பின்படி வாடிக்கையாளர்களிடம் பணம் வசூலித்து வருவதாக கூறப்படுகிறது. அதேநேரம், ஆண்டு இறுதியில் முக்கிய ஓட்டல்களில் அதிகளவில் இனிப்பு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.
 
ஆனால், ஓட்டல்களில் வரும் வருமானத்தை குறைத்து வருமான வரித்துறைக்கு கணக்கு காட்டியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 
அந்த வகையில், சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அஞ்சப்பர்,சரவணபவன், கிராண்ட்ஸ்வீட்ஸ், ஹாட்பிரட் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் வருமானத்தை குறைத்து போலி கணக்குகள் மூலம் பல கோடி மத்திய அரசுக்கு வரி ஏய்ப்பு செய்ததாக தெரியவந்தது.
 
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் 5 நிறுவனங்களில் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
 
நேற்று நள்ளிரவு வரை நடந்த சோதனையில் தமிழகம் முழுவதும் உள்ள 5 நிறுவனங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் இருந்து வரி ஏய்ப்பு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்குகள் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இந்நிலையில் அஞ்சப்பர், கிராண்ட் ஸ்வீட்ஸ், ஹாட் பிரட்,சரவணபவன் உள்ளிட்ட 5 நிறுவனங்களுக்கு சொந்தமான 32 இடங்களில் வருமான வரித்துறையினர் 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.