திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக உடன்பாடு ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுகவுடன் மதிமுக தொகுதி பங்கீடு குறித்து இரண்டு கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியும், அதற்கான முடிவு எட்டப்படவில்லை. தொடர்ந்து இழுபறியில் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் திமுக மதிமுகவை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.
அண்ணா அறிவாலயத்தில் இன்று மீண்டும் நடைபெற்ற மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் திமுக- மதிமுக இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்து, அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் இந்த 6 தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் ஈரோடு தொகுதியில் மதிமுகவின் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மதிமுக தேர்தலில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியலையும் திமுகவுடம் கொடுத்துள்ளது. அதன்படி, மதுராந்தகம், நெய்வேலி, திருச்சி, வாசுதேவநல்லூர், கோவில்பட்டி, சாத்தூர், திருப்பூர் தெற்கு உள்ளிட்ட தொகுதிகளின் பட்டியலை மதிமுக வழங்கியுள்ளது.
பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “திமுக கூட்டணியில் 6 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 தொகுதிகளிலும் தனித் தனி சின்னத்தில் போட்டியிடுவதற்கான நடைமுறை சாத்தியம் இருப்பதால் அதை உணர்ந்து இந்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
சனாதன ஹிந்துத்வ சக்திகளைத் தடுத்து நிறுத்துவதற்காக திமுகவுக்கு முழு ஆதரவைத் தருவோம். கருணாநிதி உடல்நிலை குன்றி இருந்தபோது, உங்களுக்கு எப்படி பக்கபலமாக இருந்தேனோ அதேபோல் ஸ்டாலினுடனும் துணை நிற்பேன் என அவரிடம் உறுதி அளித்தேன். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
சட்டப்பேரவைத் தேர்தலில் முதன்முறையாக திமுகவோடு கைகோர்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது. மிகச்சிறந்த தலைசிறந்த முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினைப் பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி- 6, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 6, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி- 3, மனிதநேய மக்கள் கட்சி- 2, மற்றும் தற்போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்- 6 என மொத்தம் 23 தொகுதிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தடுப்பூசி சான்றிதழில் பிரதமர் மோடியின் படத்தை நீக்க உத்தரவு- தேர்தல் ஆணையம்