சண்டிகரில் மாநகராட்சி தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அங்கு ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களை கைபற்றியுள்ளது.
பஞ்சாப் – ஹரியாணா மாநிலங்களின் பொது தலைநகரும், யூனியன் பிரதேசமுமான சண்டிகரில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று (27.12.2021) காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது.
இதில் மொத்தமுள்ள 35 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி 14இடங்களில் வெற்றி பெற்றது. தற்போது மாநகராட்சியை கையில் வைத்துள்ள பாஜக 12 வார்டுகளை மட்டுமே கைபற்றியது. காங்கிரஸ் 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அகாலி தளம் ஓரிடத்தில் வென்றுள்ளது.
பாஜக சார்பில் தற்போது மேயராக உள்ள ரவிகாந்த் சர்மா இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இதுபோலவே பாஜகவின் முன்னாள் மேயர்கள் ரவிகாந்த் ஷர்மா மற்றும் தாவேஷ் மௌத்கில் ஆகியோர் தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.
தாவேஷ் மௌத்கில், ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் ஜஸ்பிர் சிங்கிடம் 939 வாக்குகள் வித்தியாசத்திலும், ரவிகாந்த் ஷர்மா 888 வாக்குகள் வித்தியாசத்திலும் தோல்வியடைந்தனர். கடந்த முறை நடந்த தேர்தலில் மொத்தமுள்ள, 26 வார்டுகளில், பாஜக 20 இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் மாநகராட்சியில் தற்போது பொறுப்பில் உள்ள பாஜக தேர்தலில் தோல்வியடைந்தது அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் ராகவ் சதா கூறும்போது, “சண்டிகர் மாநகராட்சி தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்டோம். எங்களைப் போன்ற நேர்மையான கட்சிக்கு இவ்வளவு அன்பையும் நம்பிக்கையையும் அளித்த சண்டிகர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆம் ஆத்மி கட்சி சார்பாகவும், அரவிந்த் கெஜ்ரிவால் சார்பாகவும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சண்டிகர் வெறும் டிரெய்லர் தான். உண்மையான படம் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.