கோவை ஈஷா யோகா மையத்திற்கு பயிற்சிக்கு சென்று மாயமான பெண், கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பகுதியை சேர்ந்தவர் பழனிகுமார். இவரும், இவரது மனைவி சுபஶ்ரீயும் (34) தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இவர்களுக்கு 11 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுபஶ்ரீ, ஈசா யோகா மையத்தில் சைலன்ஸ் என்ற யோகா பயிற்சியை பெற்றுள்ளார். பின்னர் மீண்டும் யோகா பயிற்சியில் கலந்து கொள்ள கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி கோவை ஈசா யோகா மையத்துக்கு சென்றுள்ளார்.
டிசம்பர் 18 ஆம் தேதி உடன் இந்த பயிற்சி முடிவடைந்த நிலையில், அவரை அழைத்து செல்ல கணவர் பழனிகுமார் வந்துள்ளார். காலை 6 மணிக்கே வந்து காத்திருந்த நிலையில் 11 மணி ஆகியும் சுபஶ்ரீ வரவில்லை. பயிற்சி வகுப்பு முடிந்து அனைவரும் சென்றுவிட தனது மனைவி வராததால் அதிர்ச்சியடைந்த அவரது கணவர், வரவேற்பு அறையில் உள்ளவர்களிடம் தனது மனைவி குறித்து விசாரித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு பொருத்தப்பட்ட சிசிடி கேமராவை ஆய்வு செய்து பார்த்ததில், சுபஶ்ரீ காலை 9:30 மணிக்கு ஈசா யோகா மையத்தின் மற்றொரு கேட் வழியே கால் டாக்ஸியின் மூலம் ஏறி சென்றது தெரியவந்துள்ளது.
சம்பந்தப்பட்ட கால் டாக்ஸி டிரைவரிடம் விசாரணை செய்தபோது அவர் சுபஸ்ரீயை செம்மேடு பகுதியில் இறக்கிவிட்டு சென்றது தெரிய வந்துள்ளது. இந்த சூழலில் வேறொரு எண்ணில் இருந்து தனக்கு வந்த அழைப்பை பழனிக்குமார் தொடர்பு கொண்டார்.
‘என் கணவரிடம் பேச வேண்டும். ஆனால் அழைப்பை எடுக்கவில்லை’ எனக் கூறிவிட்டு ஒரு பெண் சென்றுவிட்டார் என அந்த எண்ணில் பேசிய நபர் கூறியுள்ளார். அதன்பிறகு சுபஶ்ரீயை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.
யோகா பயிற்சிக்கு சென்ற மனைவி வீடு திரும்பாததால், அவரது கணவர் பழனிகுமார் ஆலந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.
பயிற்சிக்கு கையில் செல்போன் மற்றும் உடமைகளுடன் சென்ற சுபஶ்ரீ, பயிற்சிக்கு பின் வெளியே வரும்போது கையில் எதுவும் இல்லாமல் வெள்ளை நிறை உடை அணிந்து சாலையில் ஓடுவது போன்ற வீடியோ காட்சிகள் சிக்கின. இதனையடுத்து சுபஶ்ரீயை கண்டுபிடிக்க 6 காவல் ஆய்வாளர்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவரது புகைப்படம் அனைத்து பேருந்து நிலையம், ரயில் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (01.01.2023) காலை செம்மேடு காந்தி நகர் அருகே உள்ள கிணற்றில் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், தீயணைப்பு படையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இறந்தது சுபஸ்ரீ தான் எனக் கையில் இருந்த மோதிரம் மற்றும் ஈசாவின் அடையாளம் ஆகியவற்றின் மூலம் கணவர் பழனிகுமார் உறுதி செய்தார்.
இதனையடுத்து சுபஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சுபஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? இல்லை கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை ஈஷா யோகா மையம் இதுபோன்று தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.