ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப மத்திய அரசு சிறப்பு அனுமதி அளித்துள்ளது. அதற்கான திட்டத்தை மாநில அரசுகள் வகுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப்பயணிகள், மாணவர்கள் உள்ளிட்டோர், ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் செல்ல முடியாமல் பல்வேறு இடங்களில் தவித்து வருகின்றனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. அவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மாநில அரசுகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க: ஆக்ராவில் தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் நேர்ந்த அவலம்
மேலும் கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதி செய்த பின்னர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்கான பணிகளை மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். புலம் பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்படும் பேருந்துகளை கிருமிநாசினியை கொண்டும் தூய்மைப்படுத்த வேண்டும். பேருந்துகளில் சமூக விலகலை கடைபிடிக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், வெளிமாநிலங்களில் இருந்து இடம்பெயரும் நபர்களை உள்ளூர் மருத்துவ அதிகாரிகள் கண்காணித்து அவர்களை வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும், இடம் பெயரும் நபர்கள் ஆரோக்கிய சேது செயலியை பயன்படுத்தி, அவர்களின் உடல் நலம் கண்காணிக்கப்பட வேண்டும்” என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும் வாசிக்க:உணவு கிடைக்காததால் சொந்த ஊருக்கு செல்ல மும்பையில் போராட்டம்