இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால், ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேற விருப்பம் உள்ள வீரர்கள் வெளியேறட்டும்; ஆனால், ஐபிஎல் போட்டிகள் தொடர்ந்து நடைபெறும் என்ற பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் முதல் சுற்றுப்போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பரவலை கருத்தில்கொண்டு, நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து வீரர்கள் பலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இதில் பெங்களூரு அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஸம்பா, கேன் ரிச்சர்ட்ஸன் இருவரும் தனிப்பட்ட காரணங்களால் விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து லிவிங்ஸ்டோன், ஆன்ட்ரூ டை இருவரும் விலகியுள்ளனர். அதேபோல் டெல்லி கேபிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் ரவிச்சந்திர அஸ்வின் தனது குடும்பத்தினர் கொரோனா வைரஸ் பாதிப்பின் அச்சத்தில் இருப்பதால், தொடரிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஆன்ட்ரூ டை தன்னுடைய விலகல் குறித்து கூறும்போது, “வீரர்களின் பாதுகாப்பு குறித்த பார்வையில் தற்போது நாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம். ஆனால், நாங்கள் இனியும் பாதுகாப்பாக இருப்போமா? என்பதுதான் கேள்வி.
இதுவே, இந்தியப் பார்வையில் எடுத்துக்கொண்டால் மருத்துவமனைகளில் மக்களை அனுமதிக்க முடியாத நிலை இருக்கும்போது, இந்தத் தொடருக்கு ஐபிஎல் அமைப்பும், அரசும் எப்படிச் செலவு செய்கிறார்கள்?
அதிக அழுத்தம் உள்ள இந்தக் காலகட்டத்தில் விளையாட்டுகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்ற பார்வையில் இது சரிதான். இருட்டின் முடிவில் வெளிச்சம் இருக்கும். நான் அனைவரது கருத்துகளையும் மதிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், இதுகுறித்து பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஐபிஎல் தொடர் வழக்கும்போல் நடக்கும். எந்தவித இடையூறும் இன்றி தொடர்ந்து நடைபெறும். கொரோனா அச்சம் காரணமாக வெளியேற விரும்பும் வீரர்கள் தாரளமாக வெளியேறலாம். அதற்கு தடையில்லை” எனத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மருத்துவமனை கட்டிலில் கட்டி வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்; வலுக்கும் கண்டனக்குரல்கள்