வெள்ளம் தொடர்பாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், இதுவரை வெள்ளத்திற்கு 33 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேரை காணவில்லை. இதுபோன்ற பேரழிவு இதற்கு முன்னர் ஏற்பட்டது கிடையாது.இந்த சூழ்நிலையில், தேவையானதை செய்ய அரசு தயாராக உள்ளது. மாநில அரசை தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, கேரளாவிற்கு தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளாதாக அவர் கூறினார்.
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் முதலமைச்சர் பினராயி விஜயனுடன் விமானத்தில் சென்று பார்வையிட்டார். வெள்ளப்பெருக்கில் சிக்கித் தவிக்கும் கேரள மாநிலத்தில், ராணுவத்தினர் மீட்புப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை வெள்ளத்தில் சிக்கியிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.
கனமழையால் இடுக்கி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மன்குளம் பகுதியில் உள்ள விரிஜ்சிபாரா கிராமத்தை மற்ற பகுதிகளுடன் இணைக்கும் பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அங்கு வசித்து வந்த 800 பேர் பெரும் அவதிக்குள்ளாகினர். இதனையடுத்து ராணுவம், அந்த பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து, மக்கள் வெளியேற வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
முழு கொள்ளளவை எட்டியதால், இடுக்கி அணை திறக்கப்பட்டது. இதனால், அணை பாய்ந்தோடும் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 10ம் தேதி, இடுக்கியில் உள்ள பாலத்தின் ஒரு முனையில் ஒருவர், அதிகளவு வெள்ளம் காரணமாக தனது குழந்தையுடன் கடந்து செல்ல தயங்கியபடி நின்று கொண்டிருந்தார். இதனை பாலத்தின் மற்றொரு புறத்தில் மீட்பு பணியில் ஈடுபட்ட தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த பீஹாரின் கன்னையா குமார் என்பவர், பார்த்ததும் அங்கிருந்து ஓடிச்சென்று அந்த நபரிடமிருந்து குழந்தையை வாங்கி கொண்டு மீண்டும், மறுபுறத்திற்கு ஓடி வந்தார். அவர் வந்த சில நொடிகளில் பாலம் வெள்ள நீரில் மூழ்கியது. மீட்பு படை வீரர் குழந்தையை தூக்கியவாறு ஓடுவதை பார்த்த சிலர் புகைப்படம் எடுத்து வெளியிட்டனர். இது வேகமாக பரவி வருகிறது.
இடுக்கி மாவட்டம் கஞ்சிகழி கிராமத்தை சேர்ந்தவர் மோகனன். இவர் கடந்த 9 ம் தேதி தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவு 3 மணியளவில் வீட்டு வாசலில் நின்றிருந்த அவர் வளர்த்து வந்த நாய் பயங்கரமாக கத்தியது. இதனால் சந்தேகமடைந்து அவரும், குடும்பத்தினரும் வெளியே வந்தனர். பின்னர் ஒரிரு வினாடிகளில் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டு வீடு சேதமடைந்தது. அவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். தற்போது அவர்கள் அரசு நிவாரண முகாமில் தங்கியுள்ளனர்.
ராணுவ அதிகாரிகள் கூறுகையில், கண்ணூர், வயநாடு, கோழிக்கோடு, இடுக்கி மற்றும் மல்லபுரம் ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வீரர்கள், மக்களை மீட்க 24 மணி நேரமும் உழைத்து வருகின்றனர். மோசமான வானிலை, தொலைதொடர்பு துண்டிக்கப்பட்ட கிராமங்களிலும் உழைத்து வருகிறோம் என்றனர்.
இந்நிலையில், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மேலும் 4 நாட்களுக்கு தொடர்ந்து கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கேரள வெள்ள பாதிப்பு நிவாரணத்துக்கு திமுக அறக்கட்டளை சார்பில் கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி நிதியுதவியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வழங்கினார். வெள்ளத்தால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.