கேரளாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சைக்கான சோதனையை முன்னெடுத்துள்ளத்தால் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.
இந்தியாவில் கொரோனா தாக்கம் தொடங்கியபோது அதிக பாதிப்பு கொண்ட மாநிலங்களில் கேரளா முன்னணியில் இருந்தது. ஆனால் இன்று கேரளா அரசின் தீவிர முயற்சிகளின் பயனாக நோயாளிகளின் எண்ணிக்கையும், தினசரி தொற்றுகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள விவரங்களின் அடிப்படையில், ஏப்ரல் 10 நிலவரப்படி, 1,29,751 பேர் கண்காணிப்பிலும், 730 பேர் மருத்துவமனைகளிலும் இருந்துள்ளனர். ஏப்ரல் 10 அன்று 7 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொத்தம் 13,339 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதில் 12,335 பேருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தற்போது கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிளாஸ்மா தெரபி சிகிச்சை முறையை தொடங்கியுள்ளார். பிளாஸ்மா தெரபியை ஏற்கனவே 1918 மற்றும் 1958ல் ஃப்ளு காய்ச்சலுக்கு எதிராக பயன்படுத்தினார்கள். அதன்பின் சார்ஸ், எச்1என்1, எபோலாவிற்கு எதிராக பயன்படுத்தி பலன் அளித்தது. தற்போது கொரோனாவிற்கு எதிராக இதை பயன்படுத்த உள்ளனர்.
பிளாஸ்மா தெரபி கொரோனா தாக்கி குணமடைந்த நபரின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவில் இருக்கும் எதிர்ப்பு சக்தி செல்களை கொரோனா பாதித்த வேறு ஒரு நபரின் ரத்தத்திற்கு செலுத்தி அவருக்கு கொரோனா சிகிச்சை அளிப்பார்கள். அதே சமயம் கொரோனாவின் பக்க விளைவுகளை குணப்படுத்தும் மருந்துகளும் கொடுக்கப்படும். இப்படி கூட்டு சிகிச்சை வழங்குவதன் மூலம் கொரோனாவை கட்டுப்படுத்துகிறார்கள். இந்த சிகிச்சை முறையால் நான்கு, ஐந்து நாட்களில் உடலில் முன்னேற்றம் ஏற்படும்.
ஆனால் இது கொரோனாவை குணப்படுத்தும் மருந்து இல்லை. கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் நம்முடைய உடலில் இருக்கும் செல்களை மாற்றும். நம்முடைய உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க செய்யும். உலகம் முழுக்க இந்த சிகிச்சை பெரிய அளவில் பலன் அளித்துள்ளது.
ஏற்கனவே சீனாவில் பலர் பிளாஸ்மா தெரபி சிகிச்சையில் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். அதேபோல் தென் கொரியாவில் கிட்டத்தட்ட 30% பேர் இப்படி பிளாஸ்மா சிகிச்சை மூலம் கொரோனாவின் தீவிரத்தில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திடம் கேரள அரசு அனுமதி பெற்று, கேரளாவில் தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு பிளாஸ்மா சிகிச்சை முறையை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை துவக்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று தொடங்கியவுடன் ஏராளமானோருக்கு பரிசோதனை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டவர்களை தேடி கண்டுபிடிப்பது, மருத்துவமனைகளில் தனிமைப்படுத்துவது, புலம்பெயர் தொழிலாளர்கள் தங்குவதற்கு தங்குமிடங்கள் கட்டியது, லட்சக்கணக்கானோருக்கு உணவு விநியோகித்தது என கேரள அரசு எடுத்த துரித நடவடிக்கைகள் ஏராளம். இந்தப் போராட்டத்தை சுமார் 30,000 மருத்துவ ஊழியர்கள் முன்னின்று நடத்தியுள்ளது கேரளா அரசு.
இந்திய அரசு நாடு தழுவிய ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னதாகவே கொரோனா நிவாரணத்திற்கான நிதியை கேரள அரசு அறிவித்தது. பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு, இரண்டு மாதம் முன்னதாகவே பென்சன் தொகை என அதிரடி அறிவிப்புகளையும் அறிவித்தது. ரேஷன் பொருட்கள், மளிகைப் பொருட்களும் வீட்டிற்கே டெலிவரி செய்யப்பட்டது..
இதனால் ஏப்ரல் முதல் வாரத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 விழுக்காடாக சரிந்துவிட்டது. இரண்டு பேர் மட்டும் உயிரிழந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்களில் 34 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இவ்வளவு பேர் குணமடையவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.