கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலரை காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பத்தினம் திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் மற்றும் பாலக்காடு ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலாரட் எச்சரிக்கை விடுத்திருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.
இதேபோல் திருவனந்தபுரம், கொல்லம், ஆழப்புலா, மலப்புரம், கோழிக்கோடு, மற்றும் வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், மேலும் கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கையும் இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்தது.
இந்நிலையில் கேரளாவில் கடந்த நான்கு நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. நாளை (19.10.2021) வரை கேரளாவில் மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது
விடிய, விடிய மழை பெய்து வருவதால் கேரளாவிற்குள் ஓடும் நதிகள் எல்லாம் நிரம்பி வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல அணைகள் கேரளாவில் நிரம்பும் நிலையில் உள்ளன. கேரளாவில் உள்ள பிரபலமான காக்கி அணை இன்று திறக்கப்பட உள்ளது.
அதேபோல் இடுக்கி அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால் அங்கு ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இடமலையார் அணைக்கு நீல அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சோலையார் அணையும் இன்று காலை திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர் மழை காரணமாக அணைகளில் வெள்ளம் ஏற்பட்டு, எல்லையோர கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளன. கேரளாவில் ஒரு பக்கம் மழை, வெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இடுக்கி, கோட்டையம் ஆகிய மாவட்டங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் இடுக்கியில் மட்டும் 9 பேர் நிலச்சரிவு காரணமாக பலியாகி உள்ளனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலியாகி உள்ளனர். கோட்டையத்தில் நிலச்சரிவு காரணமாக 13 பேர் பலியாகி உள்ளனர்.
இதனால் கேரளாவில் மொத்த பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. கோட்டயம், இடுக்கியில் நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் மண்ணுக்குள் மூழ்கி உள்ளன. நிலச்சரிவில் சிக்கியவர்கள் உடல்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் பகுதியில், வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடு ஒன்று ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த காட்சியில் ஆற்றில் அதீத வெள்ளம் காரணமாக கரையோரத்தில் இருந்த வீடுகள் அப்படியே பெயர்த்து எடுத்து செல்லப்படுகிறது.
கோட்டயம் மாவட்டம், கூட்டுகல் அருகே பிலாபள்ளி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால், 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. வீடுகளில் 13 பேர் இருந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அனைவரும் மண்ணில் புதைந்தனர். அந்த பகுதியினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 6 பேர் சடலங்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது.
இடுக்கி மாவட்டம், கொக்கையாறு அருகே உள்ள பூவஞ்சி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இங்கும் 3 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கினர். மேலும், இதேபோல் 10க்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
கேரளாவில் இப்போது பெய்வது பருவமழை கிடையாது. எதிர்பாராமல் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த மழை பெய்கிறது. காலநிலை மாற்றம் இந்த மழைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கேரளாவில் மழை மற்றும் நிலச்சரிவில் பலியானவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் தரப்படும் என்று அரசு தரப்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் இதுவரை 1300 குடும்பங்களை சேர்ந்த 5200க்கும் அதிகமான நபர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 150க்கும் அதிகமான முகாம்கள் உருவாக்கப்பட்டள்ளது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர் அங்கு மீட்பு பணிகளில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
கேரள மீட்பு பணியில் ராணுவம், விமானப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், சூலூரில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர்கள் கொச்சி விரைந்தன. பிரதமர் நரேந்திரமோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கேரளாவிற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.