டெஸ்ட் கிரிக்கெட், முக்கியமாக வெளிநாட்டு டெஸ்டுகளில் மணிக்கட்டுச் சுழற்பந்துவீச்சின் காலமாகத்தான் இனி இருக்கப்போகிறது.
 
சிட்னி டெஸ்டில் குல்தீப் யாதவ் பந்துவீசிய விதம் என்னை மிகவும் கவர்ந்துள்ளது.
 
இந்த நிலையில் அஸ்வின், ஜடேஜாவை விடவும் வெளிநாடுகளில் குல்தீப் யாதவ் தான் இந்தியாவின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக இருப்பார் என ரவி சாஸ்திரி சமீபத்தில் பேட்டியளித்திருந்தார்.
சிட்னியில் அவர் பந்துவீசிய விதத்தின்மூலம், வெளிநாட்டு டெஸ்டுகளில் நம்முடைய பிரதான சுழற்பந்துவீச்சாளராக குல்தீப் உருவாகியுள்ளார். அதற்குள் அஸ்வின், ஜடேஜாவைக் காட்டிலும் அவரே பிரதான சுழற்பந்துவீச்சாளர்.
 
வெளிநாட்டு டெஸ்டில் விளையாடி, 5 விக்கெட்டுகளை குல்தீப் எடுத்துள்ளதால் அவரே வெளிநாடுகளில் நம்முடைய பிரதான சுழற்பந்துவீச்சாளர். இன்னும் சொல்லவேண்டும் என்றால், வெளிநாடுகளில் ஒரே ஒரு சுழற்பந்துவீச்சாளரை மட்டும் விளையாடவைக்க முடியும் எனும்போது அவர்தான் தேர்வாவார்.
 
எல்லாவற்றுக்கும் ஒரு கால அளவு உள்ளது (2018-ல் அஸ்வினின் மோசமான உடற்தகுதியை முன்வைத்து). இப்போது, வெளிநாடுகளில் குல்தீப் தான் நம்முடைய முக்கியமான பந்துவீச்சாளர் என்று அவர் பேட்டியளித்தார்.
 
இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்குத் தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே பிரசாத் இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது:
 
இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் தான் பிரதான சுழற்பந்துவீச்சாளர். அதில் வேறெந்த சந்தேகமும் இல்லை. உலகின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர்.
 
நாங்கள் எந்த நாட்டில் விளையாடினாலும் அவர்கள் மற்ற பந்துவீச்சாளர்களை விடவும் அஸ்வினை எப்படி எதிர்கொள்வது என்றுதான் திட்டமிடுவார்கள்.
 
அவர் நம்முடைய பிரதான சுழற்பந்துவீச்சாளர். அஸ்வினைப் பற்றிப் பேசும்போது நாம் சாதனையாளரைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை நாம் முதலில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
 
நமக்காக அவர் அளித்த வெற்றிகள் எல்லாம் அபாரமானவை. ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக அவரிடமிருந்து என்ன மாதிரியான உடற்தகுதி தேவைப்படுகிறது என்பதை அவர் அறிவார். ஆடுகளத்தில் முயற்சி செய்பவருக்குத்தான் காயம் ஏற்படும்.
 
முயற்சி செய்யாதவருக்குக் காயம் ஏற்படாது. எனவே அவருடைய ஈடுபாட்டின் மீது எனக்குப் புகார்கள் இல்லை. காயம் ஏற்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
 
அவர் மீண்டும் பெரிய அளவில் திரும்ப வருவார். அவர் இந்திய அணிக்குப் பங்களிக்க வேண்டியது இன்னும் நிறைய உள்ளது என்று கூறியுள்ளார்.