ரிலையன்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் 250 ஏக்கரில் விலங்கியல் பூங்கா ஒன்றை அமைக்க உள்ளது. இது உலகின் மிகப்பெரிய மிருகக் காட்சி சாலைகளில் ஒன்றாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் மிகப்பெரிய விலங்கியல் பூங்காவை கட்டமைக்கும் திட்டத்தை ரிலையன்ஸ் நிறுவனம் கையிலெடுத்துள்ளது. இது ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் கனவு திட்டமாகும்.
இதற்காக ஜாம்நகர் அருகே மோடி கவ்டியில் 250 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதே ஜாம்நகரில் தான் உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் விலங்கியல் பூங்காவிற்கான பணிகள் நிறைவடையும் என்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி உறுதி செய்துள்ளார்.
இந்த பூங்காவில் மான்கள், கரடிகள், பூனைகள், ஓநாய்கள் உள்ளிட்ட 100 வெவ்வேறு வகையான விலங்குகள், பறவைகள், ஊர்வன உள்ளிட்டவை இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டு வரப்படவுள்ளன. மேலும் நாரை, கொக்கு, சிறுத்தைப் புலி, ஆப்ரிக்க சிங்கம், நெருப்பு கோழிகள், ஒட்டகச்சிவிங்கிகள், சிறுத்தைகள், ஆப்ரிக்க யானைகள், தவளைகள், 350 வகையான மீன்கள் ஆகியவையும் இடம்பெறவுள்ளன.
இதுதொடர்பாக பேசிய ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பரிமால் நத்வானி, “புதிதாக அமையவுள்ள பிரம்மாண்ட பூங்காவிற்கு ‘Greens Zoological Rescue and Rehabilitation Kingdom’ என்று பெயரிடப்படவுள்ளது. இதற்கான அனைத்து அனுமதிகளையும் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஏற்கனவே பெறப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு அமைச்சகத்தின் கூடுதல் இயக்குநர் சவுமித்ரா தாஸ்குப்தா கூறுகையில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் விலங்கியல் பூங்கா திட்டம் மகத்தானது. இந்தியாவில் தனியார் விலங்கியல் பூங்காக்கள் புதிதல்ல. ஏற்கனவே கொல்கத்தாவில் விலங்கியல் பூங்கா ஒன்று தனியார் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தவறுக்கு மன்னிப்பு கோரி, ஐபோன் இந்திய நிறுவனத்தின் துணைத் தலைவரை நீக்கிய விஸ்ட்ரான்