சட்டத்தை அமல்படுத்த வேண்டிய காவல்துறையிலேயே பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விஷாகா ஆணையம் இல்லாதது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
தமிழகக் காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் புகார்களை விசாரிக்கும் விஷாகா ஆணையம் இல்லாதது குறித்து மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அளித்த புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அறிந்த கனிமொழி தனது அதிர்ச்சியை டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளார். அதில், தமிழ்நாடு காவல்துறையில், உழைக்கும் மகளிர் பாதுகாப்புக்கான விஷாகா கமிட்டி இல்லை என்ற தகவலை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். உச்சநீதிமன்றம், பணி இடங்களில் பெண்கள் பாதுகாப்புக்காக விஷாகா கமிட்டி அமைக்க வேண்டும் என்று 1997ல் தீர்ப்பு வழங்கியது. மத்திய அரசு, பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் தடுப்புச் சட்டத்தை 2013ம் ஆண்டு செயல்படுத்தியது. அரசு அலுவலகங்களிலும், பெண்களுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் இருக்கத்தான் செய்கிறது.
சட்டத்தை அமல்படுத்த வேண்டிய, காவல்துறையிலேயே விஷாகா கமிட்டி இல்லை என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காவல்துறையிலேயே பெண்களின் பாலியல் புகார்களை விசாரிக்க விஷாகா கமிட்டி இல்லை என்பது, அவமானகரமானது என்று தெரிவித்துள்ளார்.