திமுக தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி மறைவிற்கு நடிகர்கள், நடிகைகள், திரையுலக பிரமுகர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.
தமிழ் நடிகர்களுள், ரஜினிகாந்த், கமல்ஹாஸன், அஜித், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர் விஜய் வர இயலாததால், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அவரது மனைவி ஷோபா வந்து அஞ்சலி செலுத்தினர். சில நாட்களுக்கு முன்பு கலைஞர், காவேரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற போது நடிகர் விஜய் அங்கு சென்று ஸ்டாலினிடம் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.
மேலும் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு ஆஸ்திரேலிய நாட்டில் இசை நிகழ்ச்சி நடத்த சென்றிருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்…”தமிழ் பெருங்குடி மக்களே நமக்கெல்லாம் துக்க தினமாக இன்று ஆகிவிட்டது. டாக்டர் கலைஞர் ஐயா மறைந்தது நமக்கு எல்லாம் துக்க தினம் தான். இந்த துக்கத்தில் இருந்து எப்படி நாம் மறந்து, திரும்பி வரப்போகிறோம் என்று தெரியவில்லை. அரசியல் தலைவர்களிலேயே கடைசி அரசியல் தலைவர் ஐயா கலைஞர் அவர்கள். சினிமா துறையிலே தூய தமிழ் வசனங்களை அளித்த கடைசி வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் அவர். அரசியல், சினிமா, தமிழ், கலை, இலக்கியம் என்று எல்லா துறைகளிலும் தலைசிறந்து விளங்கிய ஐயாவின் இழப்பு உண்மையிலேயே ஈடு செய்ய முடியாத இழப்பாகும். இந்த நேரத்தில் நான் இங்கு ஆஸ்திரேலியாவில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக எனது குழுவினருடன் வந்து இருக்கிறேன். இந்த நிகழ்ச்சி ஆறு மாதங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது என்பதால் தவிர்க்க முடியவில்லை. ஐயாவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா எழுதியுள்ள இரங்கல் கடிதத்தில், ‘தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது. நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது எனச் சொல்லலாம். சூரிய கதிரின் ஒளியை இழந்து தவிக்கிறோம். நாம் காலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை இழந்து வாடுகின்றோம். நம் மாநிலத்தின் குரலாக 75 ஆண்டுகளாக அவர் குரல் இருந்து வந்து இருக்கிறது. அவர் ஆற்றி இருக்கும் சாதனைகள் எண்ணில் அடங்காதவை. அவர் ஆட்சியில் இருக்கும்போது புரிந்த சாதனைகள் மறக்க முடியாதவை. அவர் பிரிவால் வாடும் அன்னாரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழகத் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இந்த மீளாத் துயரில் இருந்து மீண்டு வர என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். வெளி ஊரில் நடந்து வரும் படப்பிடிப்பு காரணமாக அவரது இறுதி ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் போனதற்கு மிகவும் வருந்துகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை திரிஷா மெரினாவிற்கு சென்று கருணாநிதி சமாதிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த த்ரிஷா, திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு தமிழ் திரையுலகத்துக்கு பெரிய இழப்பு என்று கூறினார். மேலும், அவரை இழந்து வாடும் உதயநிதி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்வதாகவும் அவர் கூறினார்.
ராஜாஜி ஹாலில் கலைஞரின் உடல் வைக்கப்பட்டிருந்த ஐஸ் பெட்டியின் மீது கவிஞர் வைரமுத்து கதறி அழுதார். அத்துடன் அடுத்த நாள் கருணாநிதியின் சமாதிக்கு சென்று பால் ஊற்றினார். அப்போது பேசியவர் ஒரு தந்தைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை நான் செய்தேன் என கூறினார். மேலும் அவர் இதற்காக தான் நிகழ்த்த விருந்த அரங்கேற்று விழாவை தள்ளிவைத்துள்ளார்.
நடிகர் கார்த்தி, கருணாநிதியின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது இல்லத்திற்கு சென்று ஸ்டாலின் மற்றும் உதயநிதியை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்தி, தந்தை பெரியார் என்னவெல்லாம் சொன்னாரோ, அவற்றை எல்லாம் ஆட்சியை அமைத்து செய்து காட்டியவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.
சின்ன சின்ன கிராமங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் நினைவிடத்துக்கு வந்து கொண்டே இருப்பது அவரது சாதனையைதான் காட்டுகிறது என்று தெரிவித்த கார்த்தி, இங்கு வரும் ஒவ்வொருவரும் ஏதோவொரு வகையில் கருணாநிதியால் பலன் அடைந்திருப்பவராக இருப்பார்கள் என்றார். பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உள்ளிட்ட பல சமூக சீர்திருத்தங்களை செய்த கருணாநிதியின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத ஒன்று என்று கார்த்தி கூறினார்.
மேலும் திரையுலகைச் சேர்ந்த அனைத்து பிரமுகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.