தமிழ்த் திரையுலகினர் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. இதில் திரையுலகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், இயக்குநர் சங்கம், சினிமா தொழிலாளர் சம்மேளனம், நடிகர் சங்கம் உள்ளிட்ட திரைப்பட சங்கங்களின் சார்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில்,
இந்நிகழ்ச்சியில் நடிகர் சங்கத் தலைவர் நாசர், ரஜினி, ராதாரவி, விஷால், கார்த்தி, பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், குஷ்பு, குட்டி பத்மினி, அம்பிகா, சுஹாசினி, தலைவாசல் விஜய், நிழல்கள் ரவி, ரேவதி, தாணு, கே.டி.குஞ்சுமோன், விஜயகுமார் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், விக்ரமன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனத் திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு கருணாநிதி உருவப் படத்திற்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர்.
நாசர் பேசுகையில், “படைப்பாளி, போராளி, எழுத்தாளர், பேச்சாளர் பன்முகத் தலைவர். அவரது மறைவு பெரும் இழப்பு. அவர் கதை, வசனம் எழுதிய 5 திரைப்படங்களில் நான் நடித்தது எனது பாக்கியம். நாசர் என்று என்னை பெயர் கொண்டு அழைத்த நெருக்கம் எங்களுக்குள் இருந்தது. அவர் விட்டுப்போன பணிகளை நாம் மேற்கொள்வது அவருக்குச் செய்யும் மரியாதை” எனத் தெரிவித்தார்.
விஷால் பேசுகையில், “பொதுப்பணி, கலை, இலக்கியமென எல்லாத் துறைகளிலும் அயராது உழைத்தவர். அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது. அவர் இளைஞர்களுக்கு ஓர் வழிகாட்டி. பல கவிதைகளையும் , நலத் திட்டங்களுக்கு உத்தரவளித்து எழுதிய அவரது பேனாவையும் புதிதாக கட்டப்பட்டு வரும் நடிகர் சங்க கட்டடத்தில் வைத்து அவரது புகழை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லவேண்டும்” என்று தெரிவித்தார்.
எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், “கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட திரையுலகி கலைஞர் என்றழைக்க வைத்தவர், எழுத்தாளர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தவர் கருணாநிதி”. என்றார்.
நிகழ்ச்சியில் ரஜினி பேசியதாவது, “கலைஞர் இல்லாத தமிழ்நாட்டை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. 50 ஆண்டுக்காலமாகக் எத்தனையோ துரோகங்கள் வஞ்சனைகளை எதிர்கொண்டவர் கருணாநிதி. அ.தி.மு.க-வின் ஆண்டு விழாவில் எம்.ஜி.ஆரின் புகைப்படத்தோடு தி.மு.க தலைவர் கருணாநிதியின் புகைப்படத்தையும் வைக்க வேண்டும். தமிழர்கள் யாரையும் மறக்கமாட்டார்கள் என்பதை கருணாநிதி மறைவின்போது உணர்ந்துகொண்டேன். அதைப் பார்த்து கண்ணீர் வந்துவிட்டது. என்னுடைய நண்பர் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் இந்தியாவே வந்தது. அதில் ஒரு குறை. கவர்னரிலிருந்து எல்லாருமே வந்தனர்.
தமிழ்நாட்டின் முதலைமச்சர் அங்கு வர வேண்டாமா, அங்கு இருந்திருக்க வேண்டாமா? நீங்கள் என்ன எம்.ஜி.ஆரா, ஜெயலலிதாவா ஏன் போகவில்லை. தமிழக அமைச்சரவையே பங்கேற்க வேண்டாமா. நீங்கள் என்ன எம்ஜிஆரா, ஜெயலலிதாவா இல்லை அவர்களை விட பெரியத் தலைவரா, இந்த எதிரிகள் எல்லாம் பெரிய ஜாம்பவான்களோடு முடிந்துவிட்டது, இனி வேண்டாம்.
நல்ல வேலை மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்தீர்கள். தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன். ஸ்டாலின் அந்த இடத்தில் கண்ணீர் விடத்தைப் பார்த்து நானே கண்கலங்கி விட்டேன். கருணாநிதிகூட நான் பல நாள்கள் செலவழித்தது எனக்கு சந்தோஷம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்” என்று கூறினார்.
ஆனால் இந்நிகழ்ச்சியில் கமல் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.