கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்புகள், தேர்வுகள் நடைபெற்று வந்த நிலையில், இனி நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
தற்போது கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் ஒன்றாம் வகுப்பில் இருந்து நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் பெரும்பாலான பல்கலைக்கழகங்கள் நேரடியாக செமஸ்டர் தேர்வுகள் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து உயர்க்கல்வித்துறை பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. மேலும், ஆன்லைன் மூலம் தேர்வுகள் நடத்தப்படமாட்டாது என திட்டவட்டமாக அறிவித்தது.
இந்நிலையில் நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்படாது என பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றிக்கை அனுப்பியுள்ளது. இதன்மூலம் ஆன்லைன் தேர்வுகள் முடிவுக்கு வந்துள்ளது.