நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. ஆரம்பம் முதலே கதைத்திருட்டு வழக்கு சர்ச்சையில் சிக்கியது.
பின்னர் படத்தில் தமிழக அரசையும், இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கிவிட்டு படத்தை திரையிட வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன் ஜாமீன் பெற்ற ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய 27ம் தேதி வரை இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று (நவம்பர் 27) விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு சார்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன், “சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என அரசு தரப்பில் கோரிக்கை வைத்தார். பின்னர், இதுதொடர்பாக, ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம் தெரிவிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் தெரிவித்ததையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றபோது, இயக்குநா் ஏ.ஆர்.முருகதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், தமிழக அரசின் நலத்திட்டங்களை விமா்சித்ததற்காக மன்னிப்பு கோரும் பட்சத்தில் அது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒன்றாகிவிடும். எனவே தமிழக அரசிடம் மன்னிப்பும் கோர இயலாது, அரசையும், அரசின் நலத்திட்டங்களையும் விமா்சிக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரமும் தாக்கல் செய்ய இயலாது என்று அதிரடியாக தொிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கை விரைந்து விசாரித்து 2 வார காலத்திற்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் வழக்கின் விசாரணையை 2 வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனா். மேலும் முருதாஸ்க்கு வழங்கப்பட்ட முன்ஜாமீன் இன்றுடன் நிறைவடையும் நிலையில், 2 வார காலத்திற்கு இயக்குநா் ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்யக் கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்பு செய்திக்கு: சர்கார் பட சர்ச்சைக்காக மன்னிப்பு கோருவாரா இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்