நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளது.
 
நாட்டில் உள்ள அனைத்து கணினிகளில் பாதுகாத்து வைத்திருக்கும் தகவல்கள், தகவல் பரிமாற்றங்களைக் கண்காணிப்பது, அனுப்பும் தகவல்களைக் கண்காணிப்பது, தகவல்களை இடைமறித்து ஆய்வு செய்வது, தடைசெய்வது, தகவலின் உண்மை தன்மையை ஆராய்வது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய மத்திய அரசின் 10 விசாரணை முகமைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது.
 
அதன்படி, உளவுத்துறை, போதை மருந்து கடத்தல் தடுப்புப்பிரிவு, அமலாக்கப்பிரிவு, மத்திய நேரடி வரிகள் வாரியம், வருவாய் புலனாய்வு, சிபிஐ, தேசிய புலனாய்வு அமைப்பு, டெல்லி போலீஸ் ஆணையர் அலுவலகம் ஆகியவற்றுக்கு இந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
 
தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி, இந்த அதிகாரத்தை 10 விசாரணை முகமைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
நாட்டின் இறையாண்மையை பாதுகாத்தல், பாதுகாப்புத்துறை ரகசியத்தை பாதுகாத்தல், மாநிலத்தின் பாதுகாப்பு, வெளிநாடுகளுடன் நட்புறவு உள்ளிட்டவற்றை பேணுவதற்காக இந்த 10 முகமைகளுக்கும், இந்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கு எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
 
இந்த வழக்கு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.