மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் கடலூர் தொகுதி வேட்பாளராக சி.கே.குமரவேல் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. திடீரென அவர் கட்சியிலிருந்தே விலகுவதாக நேற்று அறிவித்திருந்தார்.
இதுகுறித்து, செய்தியாளர் சந்திப்பில் பேசிய குமரவேல், “யாரும் போட்டியிட முன்வராததால் கடலூரில் போட்டியிட முன் வந்தேன். கடலூரில் பணியை தொடங்கும்படி மையக்குழுவில் இருந்தவர் சொன்னதால் தொடங்கினேன். நேர்காணலில் நான் பங்கேற்கவில்லை எனக் கூறுவது தவறானது. நான் பங்கேற்றேன்.
மேலும், மக்கள் நீதி மய்யத்திலிருந்து நான்தான் விலகினேன். கட்சி என்னை நீக்கவில்லை. மக்கள் நீதி மய்யம் முன்னேற வேண்டும் என்றுதான் எனக்கு ஆசை. நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கவில்லை.
கட்சியில் சேர்த்த ஒருவாரத்தில் கோவை சரளாவை செயற்குழு உறுப்பினராக்கியதை ஏற்க முடியவில்லை. அதேபோல், கோவை சரளாவை வைத்து வேட்பாளர் நேர்காணல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மக்கள் நீதி மய்யத்தில் செயல் ஒருவிதமாகவும், களநிலவரம் வேறு விதமாகவும் உள்ளது.
“மாற்று அரசியலை எதிர்பார்த்து மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தேன். ஆனால், இங்கும் அப்படியேதான் இருக்கிறது. மக்கள் நீதி மய்யம் கட்சி முரணாக உள்ளது. கட்சியில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் ராஜினாமா செய்தேன்.
தவறான வழிநடத்துதால் கமல்ஹாசன் தவறான முடிவுகளை எடுக்கிறார். கமல் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக ஆகவில்லையோ என்ற எண்ணம் என்னைப்போன்ற சிலருக்கு உண்டு. சினிமா, அரசியல் என இரண்டு பாதைகளில் செல்கிறார். நான் ஓராண்டாக கட்சியில் உள்ளேன். ஆனால், கமலின் செல்போன் எண் கூட என்னிடம் இல்லை” என்றார்.
மேலும், கோவை சரளா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவா ஒரு வருடம் அந்த கட்சியில் உழைத்தாய். என தனது மனைவி கேட்பதாக குமரவேல் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த கோவை சரளா, ‘நான் கட்சியில் சேர்ந்து இரண்டு நாட்கள் ஆகிறது. ஆனால் எனக்கு வாக்களிக்கும் உரிமை இருக்கிறது. அதன் அடிப்படையில் என்னை நேர்காணல் செய்ய கமல்ஹாசன் அழைத்தார்.
கட்சியில் சேர்ந்து இரண்டு நாள் ஆனால் நான் முட்டாள் என்று குமரவேல் நினைக்கிறாரா. எனக்கு அரசியல் தெரியாது, எனக்கு கேள்வி கேட்க தகுதியில்லை, நேர்காணல் செய்ய தகுதி இல்லை என்று குமரவேல் நினைக்கிறாரா? என்று கேள்வி எழுப்பிய கோவை சரளா, அந்த நேர்காணலில் நான் உள்பட பலர் கேள்வி கேட்டனர். ஆனால் குமரவேல் என்னை மட்டும் குறிப்பிட்டு சொன்னது உள்நோக்கம் கொண்டது என்று கூறினார்.