பாகிஸ்தான் கடுமையான நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறது. சர்வதேச நிதியம் ஐ.எம்.எப்.பிடம் பெற்ற கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில்தான் கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங், பிரதமர் லீ கெகியான் உள்ளிட்டவர்களை சந்தித்தார்.
 
அப்போது இவ்விரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின அதைத் தொடர்ந்து சீன வெளியுறவு துணை மந்திரி கோங் சுவான்யூ நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர், “தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து பாகிஸ்தான் மீண்டு வருவதற்கு தேவையான உதவியை சீனா செய்யும்” என கூறினார்.
 
பாகிஸ்தானுக்கு சீனா 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 42 ஆயிரத்து 600 கோடி) நிதி உதவி வழங்கும் என அப்போது தகவல்கள் வெளிவந்தன.
 
தற்போது பாகிஸ்தானில் அன்னியச்செலாவணி வற்றுகிற நிலையில் உள்ளது. குறிப்பாக, கையிருப்பு வெறும் 8.12 பில்லியன் டாலர் (சுமார் ரூ.57 ஆயிரத்து 650 கோடி) ஆக உள்ளது. இது சர்வதேச நிதியம் ஐ.எம்.எப். மற்றும் உலக வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அன்னியச்செலாவணி கையிருப்பை விட குறைவான தொகை ஆகும்.
 
அது மட்டுமின்றி இந்த தொகை, 7 வாரகால இறக்குமதிக்குத்தான் பாகிஸ்தானுக்கு போதுமானதாக உள்ளது.இதன் காரணமாக பாகிஸ்தானுக்கு கடன் வழங்க உலக வங்கியும், ஆசிய வளர்ச்சி வங்கியும் மறுத்து விட்டன.
 
இந்த நெருக்கடியான சூழலில். பாகிஸ்தானுக்கு சீனா இப்போது 2.5 பில்லியன் டாலர் நிதி உதவி (சுமார் ரூ.17ஆயிரத்து 750 கோடி) அளிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த தொகையை சீனா, தங்கள் நாட்டின் மத்திய வங்கியிடம் அளிக்கும் என பாகிஸ்தான் நிதி அமைச்சக உயர் அதிகாரி, ‘தி எக்ஸ்பிரஸ் டிரிபியூன்’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியின்போது குறிப்பிட்டார்.
 
ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா, பாகிஸ்தான் ஸ்டேட் வங்கியிடம் 2 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 ஆயிரத்து 200 கோடி) வழங்கியது நினைவுகூரத்தக்கது.
 
பாகிஸ்தான் நிதி நெருக்கடியில் தத்தளித்து வருகிறபோதெல்லாம் உதவிக்கரம் நீட்டுகிற உற்ற தோழனாக சீனா தொடர்ந்து இருந்து வருகிறது.
 
சவுதி அரேபியாவும் பாகிஸ்தானுக்கு 6 பில்லியன் டாலர் (சுமார் ரூ.42 ஆயிரத்து 600 கோடி) நிதி உதவி வழங்கும் எனவும், அதில் 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.21 ஆயிரத்து 300 கோடி) குறுகிய கால கடன் என்றும், இதற்கான வட்டி 3.18 சதவீதம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. சவுதி அரேபியா, ஏற்கனவே 3 பில்லியன் டாலர் வழங்கி விட்டது என்பதும் குறிப்பிடதக்கது .
 
இதன் மூலம் தற்போதைய நிதி நெருக்கடியில் இருந்து தற்காலிகமாக  பாகிஸ்தான் மீண்டு விட்டது  என பாகிஸ்தான் அயலுறவு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் ..