58 நாட்களில் ரூ.1.68 லட்சம் கோடி முதலீடு வந்ததால் கடனில்லா நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனத்தை மாற்றிவிட்டதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பால் தொழில் துறையினர் அனைவரும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்துள்ளனர். வருவாய் இழப்பால் நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளன. பல நிறுவனங்கள் மிகப் பெரிய நஷ்டத்தை சந்தித்ததால் மூடப்பட்டன. ஆனால் மறுபுறமோ முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் கடனில்லா நிறுவனமாக மாறியுள்ளது.
கொரோனா பொது முடக்கத்திற்கு இடையே கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜியோவின் 9.99% பங்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.43,573.62 கோடி வாங்கியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதேபோன்று ஜென்ரல் அட்லாண்டிக், கேகேஆர் உள்ளிட்ட நிறுவனங்களும் ஜியோ பங்குகளில் முதலீடு செய்தன.
மேலும் 8வது நிறுவனமாக அபுதாபி முதலீட்டு நிறுவனம் ரூ.5,683.50 கோடியை ஜியோ பங்குகளில் முதலீடு செய்து, 1.16% ஜியோ பங்குகளை அந்நிறுவனம் வாங்கியது. 1.85% பங்குகளை அபுதாபியைச் சேர்ந்த மற்றொரு முதலீட்டு நிறுவனமான முபாடலா வாங்கியது. இப்படி ஜியோவில் சர்வதேச நிறுவனங்கள் பல முதலீடு செய்தன.
மேலும் வாசிக்க: கடந்த 14 நாளில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.6.72, மற்றும் டீசல் லிட்டருக்கு ரூ.7.07 அதிகரிப்பு
அதேபோல் பங்கு விற்பனை மூலம் ஜியோ நிதி சேர்த்தது. அதன்படி சர்வதேச நிறுவனங்கள் மூலம் ரூ.1.15 லட்சம் கோடியும், பங்கு விற்பனை மூலம் ரூ.53,124 கோடியும் ஜியோவிற்கு கிடைத்துள்ளது. இந்த சாதனை மூலம் கடன் இல்லாத நிறுவனமாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மாறியுள்ளது. வெறும் 58 நாட்களில் இந்த சாதனையை செய்து முடித்துள்ளார் முகேஷ் அம்பானி.
இதுகுறித்து முகேஷ் அம்பானி கூறுகையில், உலகளாவிய நிதி முதலீட்டாளர்கள் ஜியோவுடன் கூட்டு சேர்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் நாங்கள் பெருமை கொள்கிறோம். பங்குதாரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவது என்பது ரிலையன்ஸ் நிறுவனத்தின் மரபணுவோடே ஒன்றிய விஷயம். கடன் இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் நிறுவனம் மாறியுள்ளது. எதிர்காலத்தில் பல லட்சிய இலக்குகளை நோக்கி பயணித்து வெற்றியடைவோம் என தெரிவித்துள்ளார்.
2020 மார்ச் 31 நிலவரப்படி, ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1,61,035 கோடி கடன் சுமை இருந்தது. இக்கடன் சுமையை 2021 மார்ச் 31ஆம் தேதிக்குள் முற்றிலும் குறைப்பதாக முகேஷ் அம்பானி தனது பங்குதாரர்களுக்கு இடையே பேசியிருந்தார். அதற்கு முன்னரே ரிலையன்ஸ் நிறுவனத்தின் கடன் சுமை குறைந்துவிட்டதாக முகேஷ் அம்பானி குறிப்பிட்டுள்ளார்.