டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்று, தொடர்ந்து இரு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை எனும் வரலாற்றை படைத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து சிறப்பான ஆட்டத்தை பதிவு செய்து அரையிறுதி வரை முன்னேறினார். ஆனால், அரையிறுதியில் சீன தைபேய் வீராங்கனை தை சூ-யிங்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியடைந்தார்.
இதனையடுத்து மற்றொரு அரையிறுதியில் தோல்வி அடைந்த சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவோவை வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இன்று எதிர்கொண்டார் பி.வி.சிந்து. துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய சிந்து, முதல் செட்டை 21-13 என வசமாக்கினார்.
அடுத்த செட்டில் சீன வீராங்கனை சற்று நெருக்கடி அளித்தார். எனினும், சுதாரித்து ஆடிய சிந்து, அந்த செட்டை 21-15 என கைப்பற்றினார். இதனால் 21-13, 21-15 என்ற நேர் செட்களில் பி.வி.சிந்து வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கினார். இதன்மூலம், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.
இந்த வெற்றியின் மூலம் அடுத்தடுத்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார் சிந்து. முன்னதாக 2016 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற 2வது இந்தியர் 26 வயதான பி.வி.சிந்து என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் மல்யுத்த வீரர் சுஷில் குமார் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வெண்கலமும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்றிருந்தார். அவருக்கு அடுத்தார்போல் சிந்து இரு பதக்கங்களை வென்றுள்ளார்.
ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, அவரது புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.