அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி அமெரிக்கா-மெக்ஸிகோ இடையே எல்லைச்சுவர் கட்டுவதற்காக நாட்டில் அவசரநிலையை பிரகடனம் செய்வேன் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
தனது கனவுத் திட்டமான எல்லைச்சுவர் கட்டுவதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததையடுத்து டிரம்ப் இவ்வாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
தனது எல்லைச்சுவர் திட்டத்திற்கு நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், கடந்த வருடத்தின் இறுதியிலிருந்து நடைமுறையிலுள்ள பகுதியளவு அரசாங்க முடக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் மசோதாவிற்கு இறுதி ஒப்புதல் வழங்குவதற்கு டிரம்ப் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
அமெரிக்காவில் அரசுத்துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் பல்வேறு துறைகளை சேர்ந்த 8 லட்சம் ஊழியர்கள் கடந்த டிசம்பர் மாதம் 22ஆம் தேதி முதல் சம்பளமின்றி பணிபுரிந்து வருகின்றனர்.
ஜனநாயக கட்சியினருடனான டிரம்பின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தாலும், அடுத்தகட்ட பேச்சுவார்த்தை சனிக்கிழமை மீண்டும் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போதிய நிதியின்றி முடக்கியுள்ள அரசாங்கத்தின் செயல்பாட்டை சீரமைப்பதற்கு தடையாக உள்ள எல்லைச்சுவர் கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு சார்ந்த பிரச்சனை குறித்து, அதற்கு தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வரும் ஜனநாயக கட்சியினருடன் வெள்ளை மாளிகையில் பேசுவதற்கு டிரம்ப் 90 நிமிடங்களை ஒதுக்கியிருந்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலின்றி எல்லைச்சுவர் திட்டத்திற்கு தேவையான நிதியை ஒதுக்குவதற்கு அதிபரின் அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டில் அவசரநிலை பிரகடனம் செய்வது குறித்து யோசிக்கிறீர்களா என்று டிரம்பிடம் கேட்டபோது, ‘ஆம்’ என்று பதிலளித்தார்.
“அதற்கு வாய்ப்புள்ளது. தேசிய அவசரநிலையை பிரகடனம் செய்து, எல்லைச்சுவரை விரைந்து கட்ட முடியும். இலக்கை அடைவதற்கான மற்றொரு வழி அது” என்று டிரம்ப் கூறினார்.
“நான் செய்வதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நான் இதை அரசுத்துறை முடக்கம் என்று கூறமாட்டேன். நாட்டின் பலனுக்காகவும், பாதுகாப்புக்காகவும் செய்ய வேண்டிய ஒன்றாக நான் இதை கருதுகிறேன்” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க நாடாளுமன்றத்தின் சபாநாயகர் நான்சி பெலோசி “இது மோதல்போக்குக்கொண்டதாக” இருந்தது என்றும், மக்கள் பிரதிநிதிகள் சபையின் ஜனநாயக கட்சி தலைவரான சக் ஸ்கூம்மர், “அரசாங்கம் செயல்பட வேண்டுமென்று அதிபரிடம் கோரினோம். அவர் எதிர்த்தார்” என்று கூறினார்.
அமெரிக்காவில் தொடர்ந்துவரும் அரசு செயல்பாடு முடக்கம், அந்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. மெக்ஸிகோ எல்லையில் சுவர் கட்டும் அதிபர் டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வரும் நிலையில் ஏற்பட்ட சிக்கலால், பல்வேறு அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுப் பணிகள் முடக்கம் நடந்துவருகிறது.
“கவர்ன்மென்ட் ஷட் டவுன்” என்று கூறப்படும், அரசுப் பணிகள் முடக்கம், அமெரிக்காவுக்கு புதிதில்லை ,16 நாட்கள் நீடித்த கடைசி அரசாங்க பணி முடக்கம் 2013 இல் நிகழ்ந்தது.
தற்போது அது 15 நாட்களாகத் தொடர்ந்து வருவது நாட்டில் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக ஏறத்தாழ 8 லட்சம் ஊழியர்களுக்கு சம்பளம் தரப்படாததால், அதன் மோசமான விளைவுகளை அம்மக்கள் அனுபவித்து வருகின்றனர்.
எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்படும் வரை அரசாங்க முடக்கம் தொடரும் என டிரம்ப் கூறி உள்ளார்.
அரசாங்கம் செயல்படாமல் இருப்பதன் விளைவாக தாங்கள் மோசமான விளைவுகளை சந்திப்பதாக மக்கள் சமூக ஊடகங்களில் மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு பாதுகாப்பு, சட்டம், வீட்டு வசதி, விவசாயம், வணிகம் உள்ளிட்ட ஒன்பது துறைகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.