ஜார்கண்ட் மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் பாஜக எம்.பியின் காலைக் கழுவி அந்த நீரை தொண்டர் ஒருவர் குடித்த அதிர்ச்சி சம்பவம் நிகழந்துள்ளது.

ஜார்கண்ட் மாநிலம் கோடா தொகுதி பாஜக எம்.பியாக இருப்பவர் நிஷிகாந்த் துபே. இவர் ஞாயிறன்று அவரது தொகுதியில் உள்ள கன்பரா என்னும் இடத்தில் பாலம் ஒன்றைக் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்வில் பவன் ஷாஹு என்னும் தொண்டர் ஒருவர் மேடையில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில், எம்.பி நிஷிகாந்த் துபேயின் கால்களை தட்டு ஒன்றில் வைத்து நீர் ஊற்றிக் கழுவினார். பின்னர் அவரது கால்களை துணி ஒன்றினை வைத்து துடைத்தவர், பின்னர் அந்த நீரை அப்படியே கையில் ஊற்றிப் பருகினார். பின் தலையிலும் தடவிக் கொண்டார்.இந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பான விடியோவை நிஷிகாந்த் துபே தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அத்துடன் பவனின் செயலைப் புகழ்ந்து எழுதியிருந்தார் அதற்கு சமூக வலைதளங்களில் பரவலான எதிர்ப்புகள் வந்த பின்னரும், தனது கருத்தில் உறுதியாக இருந்தார். அத்துடன் விருந்தினரின் காலைக் கழுவுவது என்பது ஆதிவாசிகள் மத்தயில் ஒரு மரியாதை நிமித்தமான சடங்கு என்றும், அதனை அரசியலாக்கக் கூடாது என்றும் கூறியிருந்தார்.

ஆனால் இதை எற்க மறுத்த காங்கிரஸ் மூத்ததலைவர் கபில்சிபில் ., இதே மரியாதை நிமித்தமான சடங்கை நிஷிகாந்த் துபே மோடிக்கு செய்ய தயாரா என்று கேள்வி எழுப்பினார் ..மேலும் சமூக வலைதளத்தில் பலரும் இதை கண்டிப்பதை கண்டு., எதிர்ப்பு மேலும் கிளம்பவே முகநூல் பதிவில் பவன் தனது காலைக் கழுவிய நீரைக் குடித்தார் என்ற தகவலை மட்டும் நீக்கி விட்டார் அதற்குப் பிறகு தான் யாரையும் அவ்வாறு நடந்து கொள்ளுமாறு கூறவில்லை என்று மறுத்தும் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.