ஓரின சேர்க்கை விரோதமானது அல்ல என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய நிலையில், நடிகர், நடிகைகள் இதற்கு வரவேற்பு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளனர்.
ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இருக்கும் என்றும், இயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்று கூறிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓரின சேர்க்கை சட்ட விரோதமானது அல்ல என்று தீர்ப்பு வழங்கினர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீர்ப்புக்கு நடிகர்-நடிகைகள் பலரும் வரவேற்பு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து நடிகை திரிஷா, “ஓரின சேர்க்கை சம்பந்தமான 377 சட்ட பிரிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் சம உரிமைக்கு செல்வதற்கான வழி கிடைத்துள்ளது. ஜெய் ஹோ..” எனக் கூறியுள்ளார்.
நடிகர் சித்தார்த், “மீண்டும் எமது மக்களை பாதுகாத்துள்ள மதிப்புமிக்க உச்சநீதிமன்றத்திற்கு நன்றி. அனைவருக்கும் வாழ்த்துக்கள். இது ஒரு சிறந்த நாள். இந்த நாளுக்காக போராடிய அனைவருக்கும் வாழ்த்துக்கள். ஜெய்ஹிந்!” என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.
ஓரின சேர்க்கைக்கு ஆதரவான தீர்ப்பு. இதுதான் உண்மையான சுதந்திரம். நன்றி என்று நடிகை ஸ்ரேயா தெரிவித்துள்ளார்.
நடிகர் ஆர்யா தெரிவித்துள்ள கருத்தில், “எல்லோருக்கும் சம உரிமை இருக்க வேண்டும். சாதி, மதங்கள் கடந்து பிடித்தவர்களுடன் இருப்பது அவரவர் உரிமை. இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறு. மாற்றங்களை ஏற்கவேண்டும். இந்த தீர்ப்பு ஒரு மாற்றத்துக்கான வழிதான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி தெரிவிக்கையில்,” ஓரின சேர்க்கை குற்றம் என்ற சட்டத்தை நீக்க தொடர்ந்து நடந்த போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்து இருக்கிறது. காதலுக்கு கண்ணும் வயதும் சாதியும் இல்லை என்பதுபோல் பாலினம் இல்லை என்பது எனது கருத்து. மேலை நாடுகளில் இது வினோதமானது இல்லை. அன்போடு நெருங்கிய இருவரை ஒரே பாலினத்தை சேர்ந்தவராக இருந்தாலும் ஏன் பிரிக்க வேண்டும்” என்றார்.
மேலும், இருவர் விரும்பி செய்தால் அது குற்றம் இல்லை. விரும்பாமல் நடக்கும் கற்பழிப்பு, பாலியல் வன்முறைகள்தான் குற்றம். ஓரின சேர்க்கையாளர்களால் சமூகத்துக்கு எந்த பிரச்சினையும் இல்லை. வன்முறையோ சீர்கேடுகளோ வரப்போவதும் இல்லை. ஓரின சேர்க்கை பாவமோ, குற்றமோ இல்லை. அன்பு இயற்கைக்கு முரணானது அல்ல எனப் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.