உதவி மின் பொறியாளர் மொத்த பணி இடங்களில் 12% பேரை வெளி மாநிலங்களிலிருந்து தமிழக அரசு தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிய விவரம் பிவருமாறு :
 
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ) உதவி மின் பொறியாளர் பணியிடங்களுக்குக் கடந்த டிசம்பர் மாதம் நேரடித் தேர்வு. அண்ணா பல்கலைக் கழகம் மூலம் நடத்தப்பட்டது. முதலில் எழுத்துத் தேர்வும், பின்னர் நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டு, உதவி மின் பொறியாளர்களாக 300 பேர் தேர்வு செய்யப்பட்டுள்னர்.
 
தேர்வு செய்யப்பட்டோரின் பட்டியலை டான்ஜெட்கோ நேற்று வெளியிட்டுள்ளது. உதவி மின் பொறியாளர்கள் 300 பேரில் 36 பேர் வெளிமாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
 
உதவி மின் பொறியாளர் மொத்த பணி இடங்களில் 12% பேரை கர்நாடகம், ஆந்திரா, கேரளா, உத்திரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து தமிழக அரசு தேர்வு செய்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது.
 
தமிழ்நாட்டில் 90 இலட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றபோது, பொறியாளர் பணி இடங்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து தேர்வு செய்திருக்கின்ற எடப்பாடி பழனிச்சாமி அரசின் செயல் நியாயப்படுத்தவே முடியாத அக்கிரமம் ஆகும்.
 
2013 ஆம் ஆண்டு வரை தமிழக அரசுப் பணிகளுக்கு தேர்வு ஆக வேண்டுமானால் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.
 
இதனை 2016, செப்டம்பர் 1 இல் சட்டமன்றத்தில் தமிழக அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் 2016 என்ற புதிய சட்டத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றி, தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணைய விதிகளில் திருத்தம் செய்தது அதிமுக அரசு.
 
இதன்படி 7.11.2016 இல் கொண்டுவரப்பட்ட புதிய உத்தரவின்படி. தமிழக அரசுப் பணிகள் வெளி மாநிலத்தவர் மட்டுமின்றி, நேபாளம், பாகிஸ்தான், பூடான் போன்ற நாடுகளிலிருந்து வந்தவர்களையும் பணியமர்த்தலாம் என்று வழிவகை செய்யப்பட்டது.
 
தமிழகத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1058 விரிவுரையாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டோர் பட்டியலை 7.11.2017 இல் தமிழக அரசு வெளியிட்டது.
 
அதில் இயந்திரப் பொறியியல் துறைக்கு 219 பேர் தேவை என்ற நிலையில். பொதுப்பட்டியலில் 67 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 46 பேர் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது 68 விழுக்காடு அயல் மாநில இளைஞர்கள். அதே போன்று மின்னணு தொடர்பியல் துறைக்குத் தேவைப்படும் 118 இடங்களில் பொதுப்பிரிவில் 36 பேர் தேர்வு செய்யப்பட்டவர்களில் 31 பேர் வெளி மாநிலத்தவர்.
 
பாலிடெக்னிக் கல்லூரி விரைவுரையாளர்கள் தேர்வில் மதிப்பெண் ஊழல் காரணமாக பணி நியமனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அதே போன்று தற்போது மின்வாரிய உதவிப் பொறியாளர்கள் தேர்விலும் வெளிமாநிலத்தவர்களை தமிழக அரசு தேர்வு செய்திருப்பது ஏற்கக் கூடியது அல்ல.
 
தமிழக அரசுப் பணிகளில் பொதுப்பிரிவில் வெளிமாநிலத்தவர்கள் சேர்க்கப்பட்டால் அது பொதுப் பிரிவினர்களுக்கும், சிறப்பாக தேர்வு எழுதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
 
மத்தியப் பிரதேசம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் அந்தந்த மாநிலத்தவர்களுக்குத்தான் அரசுப்பணி என்பதை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்துள்ளதைப் போன்று தமிழ்நாடு அரசும் சட்டம் இயற்றி தமிழக அரசுப் பணிகள் மற்றும் மத்திய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் நூறு விழுக்காடு பணி வாய்ப்பு கிடைக்க ஆவன செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 
இவ்வாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.