கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு 3.0க்கு பிறகு மத்திய அரசின் நடவடிக்கை என்னவென்று சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொடர் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதன் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு 1.0, 2.0, 3.0 என தொடர்ந்து கொண்டிருந்தாலும் கொரோனா பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒவ்வொரு நாளும் பாதிப்பில் புதிய உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு புலம்பெயர் தொழிலாளர்களின் பயணத்திற்கு கட்டணம் வசூலித்து மனிதத் தன்மையற்ற வகையில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டி, தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கான ரயில் கட்டணத்தை மாநில காங்கிரஸ் கமிட்டிகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு முக்கிய உத்தரவு பிறப்பித்திருந்தார் சோனியா காந்தி.
மேலும் வாசிக்க: நாட்டின் பொருளாதாரத்தை மீட்க என்ன செய்யலாம்- நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி
இந்த சூழலில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் உடன் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராகுல் காந்தி உள்ளிட்டோர் வீடியோ கான்பரன்சின் மூலம் ஆலோசனை நடத்தினர்.
அதில் கொரோனா தொற்று எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி கேட்டறிந்தனர். மேலும் பல்வேறு பகுதிகளில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை பற்றியும், அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி விளக்கம் கேட்டுள்ளனர்.
சோனியா காந்தி பேசும்போது, மே 17ஆம் தேதிக்கு ஊரடங்கை நீட்டிப்பது பற்றி முடிவெடுக்க அரசு வைத்துள்ள அளவுகோல்கள் என்ன? இன்னும் எத்தனை நாட்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று அரசு கருதுகிறது? என்று கேள்வி எழுப்பினார். இதேபோல் மன்மோகன் சிங் பேசுகையில், ஊரடங்கு 3.0க்கு பிறகு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? என்பதை அறிய விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் 23ஆம் தேதி கொரோனா விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததில் இருந்து பிரதமர் மோடிக்கு 7 கடிதங்களை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எழுதியுள்ளார். அதில் கொரோனாவிற்கு எதிரான நடவடிக்கைகள், மக்களின் நலன், புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை உள்ளிட்டவை பற்றி பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
முன்னதாக மன்மோகன் சிங் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது. இதன்மூலம் கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை சமாளிப்பது பற்றி ஆலோசனைகள் வழங்க திட்டமிட்டுள்ளனர்.