தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்தாததால் உள்ளாட்சி அமைப்புகளில் எந்த பணிகளும் நடக்கவில்லை. இதனால் மக்கள்நலப் பணிகள் அனைத்தும் முடங்கிப் போயுள்ளன. எனவே, உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சி.ஆர்.ஜெயா சுகின் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இதையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா பதில் மனுவை தாக்கல் செய்துள்ளார்.அதில், “தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்தில் நடத்த முடியாமல் போனதற்கு, வழக்குகளே காரணம்.
 
மேலும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு என அடுத்தடுத்த பணிகளால் உள்ளாட்சித் தேர்தலை குறித்த காலத்துக்குள் நடத்த முடியவில்லை என மாநில தேர்தல் ஆணையமே தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.
 
தமிழ்நாடு வார்டுகள் மறு வரையறை ஆணையம் தனது பணிகளை முடித்து கடந்த 2018 ஆகஸ்ட் 31-ம் தேதி அறிக்கை சமர்ப்பித்தது. அதன்படி,
99,324 கிராம பஞ்சாயத்து வார்டுகள்,
6,471 பஞ்சாயத்து யூனியன் கவுன்சில் வார்டுகள்,
655 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள் என கிராமப் பகுதிகளில் மட்டும் 1,06,450 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
 
இதேபோல, நகர்ப்புறங்களில்
8,288 டவுன் பஞ்சாயத்து வார்டுகள்,
3,163 நகராட்சி வார்டுகள்,
919 மாநகராட்சி வார்டுகள் என மொத்தம் 12,370 வார்டுகளுக்கு தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
 
அதன்படி, புதிதாக மறுவரையறை செய்த வார்டுகளில், 2011 மக்கள்தொகை கணக்கின்படி தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
 
இந்த பணிகள் முழுமையடைந்து, அதன்பிறகு சமீபத்திய வாக்காளர் பட்டியலை உள்ளாட்சித் தேர்தலுக்காக சரிபார்க்க வேண்டும்.
 
ஆனால், தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் பணியின் காரணமாக, வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் இருந்து பெற முடியவில்லை என்பதால் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
 
எனவே, தமிழகத்தில் தற்போது உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் சூழல் இல்லை. வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்குப் பிறகே உள்ளாட்சித் தேர்தல் நடத்த முடியும்.” எறு குறிப்பிடப்பட்டுள்ளது.