உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சைடிஸ்களுடன் விஸ்கி பாட்டில் இருக்கும் படம் பதிவு செய்யப்பட்டதால் சர்ச்சை ஏற்பட்டது.
உள்துறை அமைச்சகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தை 2.81 லட்சம் பேர் ஃபாலோ அப் செய்து வருகின்றனர். இந்த பக்கத்தில் இன்று காலையில் மேற்கு வங்கத்தில் ஆம்பன் புயல் மீட்பு பணிகள் தொடர்பான படங்கள் பதிவேற்றப்பட்டிருந்தன.
இப்படங்களுடன் இணைந்து பதிவு செய்யப்பட்ட படம் தான் சர்ச்சைக்கு காரணம். இரு விஸ்கி பாட்டில்கள், சைடிஸ்களுடன் இருக்கும் ஒரு படமும் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. இது சுமார் 15 நிமிடங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் இருந்தது. இது சர்ச்சையாகி பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டிருந்தன.
இத்தகைய படங்களைப் பொறுப்பில்லாமல் பதிவேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. அதேநேரத்தில் ரிலாக்ஸாக இருக்கத்தான் இந்த படம் போட்டிருக்காங்க என நெட்டிசன்கள் கிண்டலான பதிவுகளையும் போட்டு தள்ளிவிட்டனர். பின்னர் காலையில் 9.32 மணிக்கு இப்படம் நீக்கப்பட்டது. அதற்குள் இது சமூக வலைதளங்களில் வைரலாகியது.
இது தொடர்பாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், புதியதாக பணிக்கு சேர்ந்தவர்தான் இந்த படங்களை தவறுதலாக அப்லோடு செய்துவிட்டார். அவர் தமது செயலுக்கு வருத்தம் தெரிவித்திருக்கிறார். 15 நிமிடத்திலேயே அந்த படத்தை நீக்கியும் விட்டோம் என கூறியுள்ளனர்.
மேலும் வாசிக்க: காப்பான் படத்தில் பார்த்த காட்சிகள் நிஜத்திலா.. அச்சத்தில் விவசாயிகள்