பிரதமர் மோடியின் புகைப்படத்துடன், ‘உலகின் கடைசி, சிறந்த நம்பிக்கை’ என்ற தலைப்பில் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் செய்தி வெளியானதாக பரவும் புகைப்படம் போலியானது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் மோடி, குவாட் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க கடந்த செப்டம்பர் 22 ஆம் தேதி அமெரிக்கா சென்றார். ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், கடந்த 27 ஆம் தேதி இந்தியா திரும்பினார்.
மோடியின் அமெரிக்கப் பயணங்கள் குறித்து அமெரிக்க மற்றும் சர்வதேச ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்து சர்ச்சையானது.
இதனிடையே கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று பரவி வருகிறது. அமெரிக்காவில் செயல்படும் பிரபல நாளிதழான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் செப்டம்பர் 26 ஆம் தேதி குறிப்பிடப்பட்ட நாளிதழின் முதல் பக்கத்தில் மோடி புகைப்படத்துடன்,
‘உலகின் கடைசி, சிறந்த நம்பிக்கை. உலகின் மிகவும் அன்பான மற்றும் சக்திவாய்ந்த தலைவர் நம்மை ஆசீர்வதிக்க இங்கே இருக்கிறார்’ என்ற வாசகங்களோடு செய்தி வெளியானதுபோல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பப்பட்டது.
இந்தப் புகைப்படம் போலியாக உருவானது என்று பலரும் கூறிவந்த நிலையில், அந்தத் தேதியில் வெளியான தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் உண்மையான பக்கத்தின் புகைப்படத்தைப் பலரும் தங்களது சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
This is a completely fabricated image, one of many in circulation featuring Prime Minister Modi. All of our factual reporting on Narendra Modi can be found at:https://t.co/ShYn4qW4nT pic.twitter.com/gsY7AlNFna
— NYTimes Communications (@NYTimesPR) September 28, 2021
இந்நிலையில் மோடி குறித்த அந்த செய்தியை நாங்கள் வெளியிடவில்லை என்று கூறி தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை மறுத்துள்ளது. இது தொடர்பாக தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் ட்விட்டர் பக்கத்தில், ”இது முற்றிலும் புனையப்பட்ட புகைப்படம். புழக்கத்திலுள்ள பிரதமர் மோடியின் புனையப்பட்ட படங்களில் இதுவும் ஒன்று.
உண்மையான நம்பகத்தனமான செய்திகள் தேவைப்படும் சூழலில், ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட படங்களை ஆன்லைனில் மறுபகிர்வு செய்வது அல்லது பரப்புவது நிச்சயமற்ற தன்மையை மட்டுமே உருவாக்கும்” என்று பதிவிட்டுள்ளது.
முன்னதாக கொரோனா இரண்டாவது அலையை சரியாக கையாள தவறியதாக ஒன்றிய மோடி அரசு குறித்து தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டது குறித்து பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் அந்த பத்திரிகையை விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.