உலகளவில் ராணுவ தளவாட பொருட்கள், ஆயுதங்கள் இறக்குமதியில் இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கும் நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஆயுதங்கள் விநியோகம் செய்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இறக்குமதி 24% குறைந்துள்ளது.
 
ஸ்வீடனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஸ்டாக்ஹோம் சர்வதேச சமாதான ஆராய்ச்சி நிறுவனம் 2018ம் ஆண்டுக்கான ஆயுத இறக்குமதி குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
இந்த ஆய்வறிக்கை 5 ஆண்டு மதிப்பீட்டில் தயாரிக்கப்படுகிறது. இந்த ஆய்வறிக்கையில், ஆயுத இறக்குமதியில் உலகளவில் 12% பங்களிப்புடன் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதைத் தொடர்ந்து 9.5% ஆயுத இறக்குமதியுடன் இந்தியா இரணடாவது இடத்திலும், 4.2% இறக்குமதியுடன் சீனா 6வது இடத்திலும், 2.7% ஆயுத இறக்குமதியுடன் பாகிஸ்தான் 11வது இடத்திலும் உள்ளன.
 
முன்னதாக 2013-2017 ஆண்டுகளில் 13% ஆயுத இறக்குமதியுடன் சர்வதேச அளவில் இந்தியா முதலிடத்தைப் பிடித்திருந்தது.
 
ஆனால், ரஷ்யாவிடம் இருந்து போர் விமானங்கள் வர தாமதம், பிரான்சிடம் இருந்து நீர்மூழ்கி கப்பல்கள் வர தாமதமானது போன்ற காரணங்களால் 2009-2013 மற்றும் 2014-2018 ஆண்டு வரை இந்தியாவின் இறக்குமதி 24% குறைந்துள்ளது. 2014-2018 காலகட்டத்தில் ரஷ்யாவில் இருந்து மட்டும் இந்தியா 54% ஆயுதங்களை கொள்முதல் செய்துள்ளது.
 
அடுத்த 5 ஆண்டுகளில் இது கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் பாகிஸ்தான் அரசு சீனாவிடம் இருந்து 70% ஆயுங்களையும், அமெரிக்காவிடம் 8.9%, ரஷ்யாவிடம் 6% ஆயுத கொள்முதல் செய்துள்ளது. ஆனால், 2009-2013 ஆண்டுடன் ஒப்பிடும்போது 2014-2018 ஆண்டில் பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதி 39% சரிந்துள்ளது. அதேபோல், அமெரிக்க ஆயுத இறக்குமதி 81% குறைத்துள்ளது. ஆயுத ஏற்றுமதியை பொறுத்தவரையில் முறையாக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, சீனா ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா 36% ஆயுத ஏற்றுமதியும், ரஷ்யா 21% ஆயுத ஏற்றுமதியைச் செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.