பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதி பொதுப் பிரிவினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை பல்வேறு எதிர்க்கட்சிகள் ஏமாற்று வேலை என விமர்சித்துள்ளன. இந்த நிலையில், மம்தா பானர்ஜி இது பற்றி கூறுகையில், “ பின் தங்கிய வகுப்பினருக்கு வேலை கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.
 
ஆனால், எனது கேள்வி என்னவெனில், தேர்தல் என்ற பெயரால், அரசு மக்களை ஏமாற்றுமோ? அல்லது வேலை வாய்ப்பற்ற இளைஞர்களை ஏமாற்றுமோ? என்பதுதான்.
 
இந்த இட ஒதுக்கீடு சலுகை முதலில் அமல்படுத்தப்படுமா? என்பதை அவர்கள் தெளிவு படுத்த வேண்டும்.
 
அரசியல் அமைப்பு ரீதியாக இது செல்லுபடியாகுமா? இல்லையா? சட்டப்பூர்வமாக இது செல்லத்தக்கதுதானா? அமல்படுத்தும் சாத்தியம் உள்ளதா? என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும்.
 
50 சதவீதத்துக்கும் மேலாக இட ஒதுக்கீடு இருந்தால் அது தள்ளுபடி செய்யப்பட வாய்ப்பு உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவு இதுதான். எனவே, தற்போது சொல்லுங்கள், இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா? முறையாக இந்த இட ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும் என நான் நினைக்கிறேன்.
 
வேலை வாய்ப்பற்ற ஏழை எளிய மக்களுக்காக நேர்மறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஏழை மக்கள் மிகவும் முக்கியமானவர்கள். அரசியல் நோக்கத்திற்காக அவர்களை ஏமாற்றக்கூடாது.
 
வேலை வாய்ப்பின்மை பிரச்சினை இந்தியாவில் விண்ணை முட்டும் அளவுக்கு உள்ளது. வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். ஆனால், அவர்களை ஏமாற்றினால் அது மிகவும் மோசமானதாக செல்லும். விவசாயிகள் ஏமாற்றப்படுகின்றனர். இளைஞர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.
 
முதலில் அவர்கள்(அரசு) சட்டம் என்ன சொல்கிறது என பார்க்க வேண்டும். சட்டப்பூர்வமாகவும் அரசியல் அமைப்பு ரீதியாகவும் சரி கட்ட வேண்டும்.
 
இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் செல்லக்கூடாது என உச்ச நீதிமன்ற உத்தரவு உள்ளது. கேபினட்டில் எடுக்கப்பட்ட ஆவணங்களின் படி இட ஒதுக்கீடு 50 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயர்த்தப்படும் என உள்ளதாக நான் பார்த்தவரையில் கூறுகிறேன்” இவ்வாறு அவர் கூறினார்.