கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டதை தொடர்ந்து, மும்பை பாந்த்ராவில் சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் பல்லாயிரம்க்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் கூலி வேலை செய்து பிழைத்து வருகிறார்கள். ஆனால் கடந்த மார்ச் 24ம் தேதி இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை அறிவித்து, 4மணி நேரத்தில் ஊரடங்கு நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. 21 நாட்கள் ஊரடங்கு காரணமாக அவர்கள் வேலையில்லாமல் உணவில்லாமல் தவித்தனர்.
இந்நிலையில் பிரதமர் மோடி இன்று மீண்டும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரி மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் 3,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திரண்டனர்.
தங்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை என்றும் இனியும் தங்களால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறி, சொந்த ஊருக்கு திருப்பி அனுப்புமாறும் கோரி திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக விலகலை கடைபிடிக்காமல் 3,000 க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மும்பை போலீசார் வெளிமாநில தொழிலாளர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.
இச்சம்பவம் குறித்து விளக்கமளித்த உத்தவ் தாக்கரே, இன்று பாந்த்ராவில் நடந்தது துரதிர்ஷ்டவசமானது. ஏப்ரல் 14 முதல் ரயில்கள் இயக்கப்படும் என்று நம்பி தொழிலாளர்கள் வீட்டிற்கு செல்லலாம் என்ற நினைத்ததால் இது நடந்திருக்கிறது. உங்களுக்கு உரிய பாதுகாப்பை அளிப்பது எங்களின் கடமை.
மேலும் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நான் ஏற்கனவே கூறியது போல மகாராஷ்டிரா நாட்டிற்கு வழி காண்பிக்கும். கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்கள் 10 உள்ளன. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டத்தையும் கொரோனா இல்லாத மாவட்டமாக்க முயற்சி செய்து வருகிறோம். கொரோனா பாதிப்பு முடிந்தவுடன் மகாராஷ்டிரா மாநிலம் பெரிய சவாலை எதிர்கொள்ள வேண்டும். அதை சமாளிக்க பல்வேறு குழுக்களை அமைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.
இதுபோன்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதரத்தை, அவர்களின் அடிப்படை தேவைகளான உணவு, இருப்பிடம் கொடுப்பது மத்திய, மாநில அரசுகளின் கடமையாகும் என்பதை உணர்ந்து துரிதமாக செயல்பட வேண்டும்