பட்டாசு வெடிக்க இரண்டு மணி நேரம் மட்டுமே உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால், தமிழகத்தில், காலையில் 6 முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை என மொத்தம் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டால் தான் சென்னையில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தீபாவளியில் காற்றுமாசு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் கிடைத்துள்ளது.
சென்னையில் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், சௌகார்பேட்டை உள்ளிட்ட 5 இடங்களில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் கருவிகளை வைத்து கண்காணிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச காற்றுமாசு அளவு 100 பி.பி.எம். ஆகும் . கடந்த ஆண்டு தீபாவளி நாளில் சவுகார்பேட்டையில் காற்றுமாசு 777 பி.பி.எம். ஆக இருந்தது ஆனால் இந்த ஆண்டு சவுகார்பேட்டையில் 114 பி.பி.எம். என்ற அளவில் காற்றுமாசு இருந்ததாக தெரிவித்துள்ளது.
மேலும் வேளச்சேரியில் கடந்த ஆண்டை விட காற்றின் மாசு அளவு குறைந்துள்ளது. தீபாவளியின்போது தி.நகரில் அதிகளவு ஒலி மாசு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
காற்றுத் தரச் சுட்டெண் (ஆங்கிலத்தில்: AIR QUALITY INDEX (AQI)) என்பது மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்கள் சுவாசிக்கத் தேவையான சுத்தமான காற்று உள்ளதா என்பதன் அளவீடு ஆகும். காற்றுத் தரம் குறை அடையும் போது பல்வேறு மோசமான உடல் நலக் கேடுகள் விளையும். காற்றுத் தரச் சுட்டெண் அல்லது காற்று மாசுச் சுட்டெண் அல்லது மாசுத் தரச் சுட்டெண் ஆகியன அரச திணைக்களங்களால் ஒரு இடத்தில் காற்றின் தரத்தை மதிப்பிட்டு வெளியிடப்படும் அளவீடுகள் ஆகும்
தீபாவளியன்று காற்று மாசு குறியீடு சென்னையில் 65 புள்ளிகளாகவும், டெல்லியில் சராசரி காற்று மாசு 349 குறியீடு என மிகவும் அபாய அளவில் இருப்பதாகவும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது..
ஆக்ராவில் 353 என்ற அளவில் காற்று மாசு உள்ளது. கர்நாடக மாநிலம், பெங்களூருவில் காற்று மாசு குறியீடு 87 ஆக உள்ளது. வட மாநிலங்களை விட சென்னையில் மிகவும் குறைந்த அளவில் காற்று மாசு பதிவாகியுள்ளது.
டெல்லியில் சமீப காலமாக காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், காற்றின் தரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தமிழகம் முழுவதும் தீபாவளியை முன்னிட்டு அனுமதிக்கப்படாத நேரத்தில் பட்டாசு வெடித்ததாக 2,372 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. சென்னையில் மட்டும் 359-க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுளளது.
இந்த மாற்றம் காரணமாக இயற்க்கை ஆர்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றம் விதித்த 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் தீர்ப்பை வரவேற்று சமூகவலைதளத்திலே பதிவிட்டு வருகின்றனர்