உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா இவ்வாண்டு, அக்டோபர் 2-ம் தேதியோடு பதவி ஓய்வு பெறுகிறார்.
பொதுவாக தலைமை நீதிபதி பணியானது பணி மூப்பு அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக உள்ள தீபக் மிஸ்ரா, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளதை அடுத்து ஒரு மாதத்திற்கு முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை பணி மூப்பு அடிப்படையில் ஓய்வு பெறும் தலைமை நீதிபதியே தெரிவிப்பது நடைமுறையில் இருந்து வருகிறது.
அந்த நடைமுறையை கருத்தில் கொண்டு இதுகுறித்து அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரைக்கும்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பி உள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபயாக ரஞ்சன் கோகாய் பெயரை தீபக் மிஸ்ரா பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் தற்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, கடந்த ஜனவரி மாதம் பகிரங்கமாக போர்க் கொடி தூக்கிய 4 நீதிபதிகளில், ரஞ்சன் கோகாயும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.