திருச்செந்தூரில் மாடுகளை திருடிய கும்பலின் தலைவனாக இந்து முன்னணி நகர துணைத்தலைவர் கந்தன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 
மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகளை யாருக்கும் தெரியாமல் திருடி, தமிழகம் மற்றும் கேரளாவில் விற்பனை செய்த வழக்கில் திருச்செந்தூர் இந்து முன்னணி பிரமுகர் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
திருச்செந்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேய்ச்சலுக்குச் செல்லும் மாடுகள் சில நாட்களாக காணாமல் போனதாக புகார் எழுந்தது.
 
இதுகுறித்து கடந்த சில நாட்களில் 25 மாடுகளை காணவில்லை என 20-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். மாடு திருடுபோன விவகாரம் குறித்து திருச்செந்தூர் காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
 
திருச்செந்தூர் – நாகர்கோவில் சாலையில் காவல்துறையினர் இரவு ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்திருந்த போது சந்தேகத்திற்கிடமாக ஆட்டோவில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
 
அப்போது ஆட்டோவில் சென்றவர்களை, மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டதில், மேய்ச்சலில் இருந்த மாடுகளை திருடிச் சென்றது வெளிச்சத்துக்கு வந்தது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மாடுகளை திருடிய கும்பலின் தலைவனாக இந்து முன்னணி நகர துணைத்தலைவர் கந்தன் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 
 
இதில் கந்தன் தலைமையில், கடந்த ஓர் ஆண்டாக மாடுகளைத் திருடி விற்பனை செய்தது தெரியவந்ததுள்ளது.
 
கந்தனுடன் ஹனீபா, முருகேசன், கார்த்தி ஆகிய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 9 மாடுகளை மீட்டுள்ளனர்.
 
மேலும் மாடு திருடுவதற்கு பயன்படுத்திய காசிக்கு சொந்தமான ஆட்டோ மற்றும் முருகேசனுக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
 
மாடுகளைத் திருடி விற்பனை செய்த வழக்கில், மேலும் 3 பேரை திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
 
விசாரணையில், தமிழகம் மட்டுமின்றி, இந்தக்கும்பல் கேரளாவுக்கும் மாடுகளை கறிக்காக விற்பனை செய்துவந்தது தெரியவந்துள்ளது.
 
இதில், கொடுமை என்னவென்றால், 25,000 மதிப்புள்ள மாட்டை, வெறும் 6,000 ரூபாய்க்கு இந்த  இந்து முன்னணி கும்பல் விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டுள்ளது.
 
அடுத்த அதிர்ச்சியென்னவென்றால், சுற்றுவட்டாரப்பகுதியில் உள்ள கறிக்கடைகாரர்களுடன் நேரடியாக கூட்டு சேர்ந்து கொண்டு, இந்தக்கும்பல் மாடுகளை திருடி விற்பனை செய்துள்ளது.
 
காணமல் போன மாட்டை தேடி யாரும் வருவதற்குள், திருட்டு மாடு கறிக்கடைக்கு வந்த சில நிமிடங்களில், வெட்டப்பட்டு, கறித்துண்டுகளாக இக்கும்பல் மாற்றியுள்ளது.
 
ஒருவேளை போலீசில் சிக்கிக்கொண்டால், ஹனீபாவை மட்டும் சிக்கவைத்துவிட்டு, மற்றவர்கள் தப்பிக்கும் திட்டத்தை இந்து முன்னணி பிரமுகர் கந்தன் வைத்திருந்தாராம் .
 
ஆனால், அத்திட்டம் கை கொடுக்கவில்லை. கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பேரூரணி சிறையில் போலீசார் அடைத்தனர்.
 
மாட்டுக்கறியை வீட்டில் வைத்திருந்தவர்கள், மாட்டுக்கறியை சாப்பிட்டவர்களை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடுமையாக தாக்கிய சம்பவங்கள் வட மாநிலங்களில் நடந்துள்ளன.
 
இந்தியாவிலேயே அதிகளவு மாமிசம் சாப்பிடுவது தென்னிந்தியாவில்தான், அப்படி தமிழகத்தில் கறிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
 
ஆனால், மாட்டை கறிக்காகக் கொல்லக்கூடாது என்று சொல்லும் இந்து முன்னணியைச் சேர்ந்த பிரமுகர் தலைமையில், மாட்டை திருடி, கறிக்காக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
இதனால் மாடுகளைத் திருடிய வழக்கில் இந்து முன்னணி நகர துணைத்தலைவர் சிக்கியதால், இந்து முன்னணி அமைப்பினர் அவமானத்தில் உறைந்து உள்ளனர்