கடந்த 1992 ஆம் ஆண்டு சர்வே தொடங்கப்பட்டதிலிருந்து முதல்முறையாக ஆண்கள் எண்ணிக்கைவிட பெண்கள் எண்ணிக்கை (1000 ஆண்களுக்கு 1020 பெண்கள்) அதிகரித்துள்ளதாக தேசிய குடும்ப மற்றும் சுகாதார ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மக்கள் தொகை எவ்வாறு இருக்கிறது, எந்த வீதத்தில் இருக்கிறது என்பதை பரவலாக அறிந்து கொள்ள தேசிய குடும்ப நல ஆய்வு பயன்படுகிறது.
தற்போது ஒன்றிய சுகாதாரத் துறையின் தேசிய குடும்ப மற்றும் சுகாதார ஆய்வு (National Family and Health Survey- NFHS) நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 2019 இல் தொடங்கி 2021 வரையில் மூன்று வருடங்களில் இரண்டு கட்டமாக இந்த சர்வதேச நடத்தப்பட்டுள்ளது.
மொத்தம் 22 மாநிலங்களில் இந்த சர்வே எடுக்கப்பட்டது. 650,000 பேரிடம் 707 மாவட்டங்களில் மொத்தமாக சர்வே இரண்டு கட்டமாக எடுக்கப்பட்டது. முதல் கட்டத்தில் 10 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களிலும் இந்த சர்வே எடுக்கப்பட்டது.
அதன்படி இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 1020 பெண்கள் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1990களில் இந்தியாவில் 1000 ஆண்களுக்கு 927 பெண்கள் மட்டுமே இருந்தனர். அதன்பின் 2005-06 சர்வேயில் இந்தியாவில் 1000: 1000 என்ற அளவில் பெண்கள் இருந்தனர்.
2015-16 ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேசிய குடும்ப மற்றும் சுகாதார ஆய்வில் இந்தியாவில் 1000 ஆண்கள் 991 பெண்கள் இருந்தனர். இந்நிலையில் தேசிய குடும்ப மற்றும் சுகாதார சர்வேயில் முதல்முறையாக இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் அதிகம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பிறக்கும் குழந்தைகளில் நோய் உள்ளிட்ட பிற சிக்கல்களில் இருந்து மீண்டும் உயிர்பிழைத்திருப்பதில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் சிறப்பாக இருக்கிறார்கள். அதே சமயம் இந்தியாவில் ஆண்களின் வாழ்நாள் 66.4 சதவிகிதமாகவும், பெண்களின் வாழ்நாள் 69.6 சதவிகிதமாகவும் உள்ளது இதற்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்த சர்வேயின்படி இந்தியாவில் தற்போது 26.5% பேர் 15 வயதுக்கு குறைந்தவர்கள். 10 வருடத்திற்கு முன் இது 34.9% ஆக இருந்தது. வடஇந்தியாவை காட்டிலும் தென்னிந்தியாவில் வயது குறைவானவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், தென்னிந்தியாவில் குழந்தைகள் பிறப்பு வெகுவாக குறைந்துள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாநிலங்கள் அடிப்படையில் மொத்த கருவுறுதல் விகிதம் (டிஎப்ஆர்) என்பது 2க்கும் குறைவாக இருக்கிறது. இதன்மூலம் இந்தியா மக்கள் தொகையை நிலைப்படுத்தி வருகிறது.அதாவது மொத்த கருவுறுதல் விகிதம் 2.1 க்கு குறைவாக இருந்தாலே பெண்கள் சராசரியாக தங்கள் வாழ்நாளில் குறைந்தபட்சம் இரு குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்பது கணக்காகும்.
அதேநேரம் 2க்கும் குறைவாகச் சரியும்போது, மக்கள் தொகையும் சரியத் தொடங்கும். ஆனால், இந்தியாவில் பிஹார், மேகாலயா, மணிப்பூர், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகியவற்றில் மட்டும்தான் மொத்த கருவுருதல் 2க்கும் அதிகமாக இருக்கிறது.
இதில் கேரளா மட்டுமே விதிவிலக்காக இருக்கிறது. கேரளாவில் கடந்த 4-வது சர்வேயில் ஆயிரம் ஆண்களுக்கு 1,049 பெண் குழந்தைகள் என இருந்த நிலையில் தற்போது 1,121 பெண்கள் என அதிகரித்துள்ளது. கேரளாவில் மொத்த கருவுருதல் விகிதமும் 1.6 லிருந்து 1.8 ஆக அதிகரித்துள்ளது.
உலகிலேயே அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருந்து வருகிறது. 2040 முதல் 2050 ஆம் ஆண்டுகளுக்கு இடையே இந்தியாவின் மக்கள் தொகை 160 கோடி முதல் 180 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2031 ஆம் ஆண்டில் இ்ந்தியாவின் மக்கள் தொகை சீனாவை முந்தும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.