குட்கா முறைகேடு வழக்கில் அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமிஷனர் வீடுகளில் நடந்த அதிரடி சோதனையை தொடர்ந்து, மத்திய அரசு அதிகாரி, குட்கா தயாரிப்பாளர் மாதவராவ் உட்பட 5 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளி அப்ரூவரானதால், சோதனை நடத்தப்பட்ட அதிகாரிகள் அடுத்தடுத்த கைது செய்யப்படுவார்கள் என்ற பரபரப்பு இந்த 40 கோடி குட்கா ஊழல் வழக்கில் எற்பட்டுள்ளது .குட்கா தயாரிப்பாளர் மாதவராவிடம் இருந்துதான் போலீஸ் மற்றும் மத்திய, மாநில அரசுத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட தகவல்கள் வெளியாகின. இதனால் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் அடிப்படையில்தான் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டன. அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டன. இந்தநிலையில், மாதவராவ், இந்த வழக்கில் அப்ரூவராக மாறிவிட்டார். இதனால் வெளியில் இருந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால்தான், அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். லஞ்சம் கொடுத்தவரே அப்ரூவராக மாறிவிட்டதால், இந்த வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

சிபிஐ தனது முதற்கட்ட விசாரணையை நடத்தி 2 மாதங்களுக்கு முன்பு டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு உணவு பாதுகாப்புத்துறை அலுவலகத்தில் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

கடந்த 29ம் தேதி குட்கா வியாபாரி மாதவராவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பது குறித்த ஆவணங்களுடன் மாதவராவின் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை, குண்டூர் என 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். சென்னையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் ரமணா, தமிழக டிஜிபி.டி.கே.ராஜேந்திரன், முன்னாள் மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் ஆகியோரது வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அதேபோல், உதவி கமிஷ னர் மன்னர்மன்னன்(செங்குன்றம் உதவி கமிஷனராக இருந்தவர்), விழுப்புரம் டிஸ்பி சங்கர்(மத்தியக் குற்றப்பிரிவு உதவி கமிஷனர்), தூத்துக்குடி மாவட்டம் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் குமார்(செங்குன்றம் இன்ஸ்பெக்டராக இருந்தவர்) ஆகியோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.

அதேபோல், குட்கா தயாரிக்கும் அண்ணாமலை இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்கள், குட்கா வியாபாரிகளான ஏ.வி.மாதவராவ், உமாசங்கர், சீனிவாசராவ் ஆகியோர் வீடு மற்றும் நிறுவனங்கள், உணவு பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் செந்தில் முருகன், டாக்டர் லட்சுமிநாராயணன், சிவக்குமார் வீடுகள், மத்திய வரித்துறை அதிகாரிகளான குல்சார் பேகம், கலால் வரித்துறை கண்காணிப்பாளர் என்.கே.பாண்டியன், ஷேசாத்ரி வீடுகள், விற்பனை வரித்துறை அதிகாரிகள் பன்னீர்செல்வம், குறிஞ்சி செல்வம், கணேசன் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மற்ற இடங்களில் நேற்று முன்தினமே சோதனை முடிந்தாலும், முன்னாள் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் மட்டும் நேற்று காலை வரை சோதனை நடந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர் சோதனையை தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு குட்கா வியாபாரி மாதவராவ், பங்குதாரர்களான உமா சங்கர், சீனிவாசராவ் மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் என்.கே.பாண்டியன் ஆகிய 5 பேரை ேநற்று முன்தினம் இரவு அழைத்து வந்து தொடர் விசாரணை நடத்தினர்.

அப்போது சிபிஐ அதிகாரிகளின் கிடுக்கு பிடி விசாரணைக்கு பயந்து குட்கா வியாபாரி மாதவராவ் அப்புரூவராக மாறி லஞ்சம் கொடுக்கப்பட்டது குறித்த தகவல் அனைத்தையும் தெரிவித்துள்ளார். அவர் அறித்த அனைத்து பதிலையும் சிபிஐ அதிகாரிகள் பதிவு செய்து கொண்டனர்.

அதைதொடர்ந்து, சிபிஐ அதிகாரிகள் ேநற்று மாலை 4.45 மணிக்கு குட்கா வியாபாரி மாதவராவ், அவரது பங்குதாரர் உமா சங்கர், சீனிவாசராவ், உணவு பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி செந்தில் முருகன், மத்திய கலால் துறை கண்காணிப்பாளர் என்.கே.பாண்டியன் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் 5 பேரையும் சிபிஐ அதிகாரிகள் இரண்டு கார்களில் அழைத்து வந்து மாலை 5.15 மணிக்கு உயர் நீதிமன்றத்தில் உள்ள சென்னை முதன்மை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

அதைதொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக நீதிபதி திருநீல பிரசாத் முன்பு ஆஜர்படுத்தினர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைக்கு பிறகு வருகிற 20ம் தேதி வரை 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

குட்கா உரிமையாளர் மாதவராவிடம் இருந்து போலீஸ், சுகாதாரம், மாநகராட்சி, மத்திய கலால் வரித்துறை அதிகாரிகளுக்கு லஞ்ச பணத்தை புரோக்கர்கள் நந்தகுமார், ராஜேந்திரன் ஆகியோர் வாங்கி கொடுத்து வந்தனர். இதனால் அவர்கள் இருவரையும் நேற்று காலை சிபிஐ அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராேஜந்திரன், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீடு உள்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனை முடிந்ததைத் தொடர்ந்து சோதனைக்குள்ளானவர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரிக்க டெல்லி சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். தற்போது ஓரிரு நாட்கள் சென்னையில் தங்கியிருக்க முடிவு செய்துள்ள சிபிஐ அதிகாரிகள், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அதேநேரத்தில், விசாரணைக்குள்ளானவர்களில் பலருக்கு நேரடியாக மாமூல் வாங்கிய ஆவணங்கள் சிக்கியுள்ளன. இதனால், அதிகாரிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

குட்கா வியாபாரி மாதவராவ்விடம் லஞ்சம் பெற்றோர் பட்டியலில், செங்குன்றம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்த சம்பத் பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போது சம்பத், தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குட்கா வழக்கில் சிபிஐ நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தியது.

தூத்துக்குடியில் உள்ள இன்ஸ்பெக்டர் சம்பத் வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் கிடைத்த ஆவணங்களின்படி, சம்பத்தின் சென்னை ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வழக்கிற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சோதனை நடத்தப்பட்ட இன்ஸ்பெக்டர் சம்பத் வீட்டை சிபிஐ அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

குட்கா ஊழல் குறித்து சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியதை தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை டிஜிபி டி.கே.ராஜேந்திரன் நேற்று முன்தினம் இரவு சந்தித்துப் பேசினார். அப்போது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி ஆகியோர் உடனிருந்தனர். அப்போது, தான் தவறு செய்யவில்லை. தன் பெயரைச் சொல்லி யாராவது வாங்கியிருப்பார்கள்.

தற்போது ராஜினாமா செய்தால், எனக்கு தேவையில்லாமல் சில நெருக்கடிகளை சில அதிகாரிகள் கொடுப்பார்கள். இதனால் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று கூறியதாகவும், இதை முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்றுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் 15வது நிதி கமிஷன் அதிகாரிகள் வந்திருந்தனர். முதல்வர், அமைச்சர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்கள் தலைமைச் செயலகம் வந்திருந்தனர். இதனால் டிஜிபியும் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நேற்று அவர் தலைமைச் செயலக நிகழ்ச்சிக்கு வரவில்லை. இரவு வரை தனது அலுவலகத்தில்தான் இருந்தார். பின்னர் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.

இதுகுறித்து சிபிஐ அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, இது வருமான வரித்துறை போன்ற மோசடி வழக்கு இல்லை. கிரிமினல் வழக்கு. எங்களுக்கு தேவையான ஆவணங்கள் கிடைத்தால் கைது செய்வோம். தற்போது சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளன. விசாரணையின் போக்கைப் பொறுத்துதான் முடிவு எடுப்போம் என்றனர்.

சிபிஐயின் இந்த அதிரடி நடவடிக்கை குட்கா 40 கோடி ஊழலில் ஈடுப்பட்ட அதிமுக அமைச்சர்கள் மற்றும் காவல்துறை அரசு அதிகார்கள் அனைவரின் வயிற்றிலும் புளியை கரைத்து வருவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன

வாசகர் கவனத்திறகாக இதுவரை வருமானவரி ரைடில் சிக்கிய முக்கிய புள்ளிகள் விவரம் ஸ்பெச்கோ தொகுத்து தருகிறது :
முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா
தமிழ்நாடு டிஜிபி டிகே. ராஜேந்திரன்
முன்னாள் டிஜிபி ஜார்ஜ்

உதவி ஆணையர் மன்னர் மன்னன்

வில்லிபுரம் டிஎஸ்பி ஷங்கர்

ஆய்வாளர் சம்பத் குமார்

உணவு மற்றும் மருந்துத்துறை அதிகாரிகள் செந்தில் முருகன்,

டாக்டர் லஷ்மி நாராயணன்,
இ.சிவகுமார்,

மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள்
ஆர்.குல்சார் பேகம்,
ஆர்.கே.பாண்டியன்,
ஷேஷாத்ரி

விற்பன வரித்துறையைச் சேர்ந்த
பன்னீர் செல்வம்,
குறிஞ்சி செல்வம்,
கணேசன்

ஜேஎம் நிறுவனத்தைச் சேர்ந்த 
ஏ.வி.மாதவராவ்,
உமா சங்கர் குப்தா,
ஸ்ரீநிவாஸ் ராவ் 
மற்றும்
சில நூறு நபர்கள்
இவர்களைத் தவிர துனை முதல்வர் ஓபிஎஸ் மேல் சொத்துக் குவிப்பு வழக்கு உள்ளது,
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இப்போதைய முதல்வர்இபிஎஸ் பணம் விநியோகித்ததாக குற்றச்சாட்டு உள்ளது.
இதுவரை ரெய்டு நடந்த இடங்கள்
தலைமைச் செயலகம்,
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு,
தினகரனின் பங்களாக்கள், பண்ணை வீடுகள்
விஜயபாஸ்கர் வீடு,
மற்றும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளவர்களின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட பல நூறு இடங்கள்.
கிட்டத்தட்ட இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் இரண்டாயிரம் இடங்களில் ஐ.டி ரெய்டு நடந்ததுள்ளது.