ஜனவரி 28-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் திடீரென ரத்து செய்யப்பட்டது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் ஆதரவையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
 
ஆனால் கஜா புயல் நிவாரண பணிகளை சுட்டிக்காட்டி தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற தலைமைச் செயலாளரின் கோரிக்கையை ஏற்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
 
இந்நிலையில் திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும்.
 
ஆனால் திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவித்தது உள்நோக்கம் இருந்தது. புயல் நிவாரண பணி முடிவடையாத நிலையில் தேர்தல் நடந்தால் மக்கள் அதிர்ச்சியடைவர்கள் ஆதனால் வரும் மக்களவை தேர்தலுடன் மினி சட்டமன்ற தேர்தல் என்று சொல்லுமளவுக்கு 20 தொகுதியிலும் தேர்தல் தேவை என அவர் வலியுறுத்தியுள்ளார்.
 
இந்த நிலையில் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன் என்பதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
 
இது குறித்து தேர்தல் ஆணையம் கூறிய விவரம் வருமாறு“ திருவாரூர் தவிர மற்ற தொகுதிகளுக்கு ஏப்ரல் வரை இடைத்தேர்தல் வேண்டாம் என்று தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
 
கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி டிசம்பர் 3 ஆம் தேதி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதியிருந்தார். தமிழக அரசிடம் கருத்து கேட்க உள்துறை அமைச்சகமும் அறிவுறுத்தியிருந்தது.
 
நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரியும் அறிக்கை அளித்து இருந்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் காலியாக உள்ள 18 தொகுதிகளிலும் விரைவில் தேர்தல் நடத்தக்கோரி மதுரையை சேர்ந்த தாமோதரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
 
மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் தமிழகத்தில் காலியாக உள்ள 18 தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் நடத்தப்படும்? என்று கேள்வி எழுப்பியது.
 
அதனை தொடர்ந்து 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் குறித்த வழக்கில் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஜனவரி 22-ம் தேதிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.