கபில் தேவ், கங்குலி, தோனி ஆகியோரால் முடியாத ஒரு செயலை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.
 
இதுவரை எந்தவொரு இந்திய அணி கேப்டனும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் இந்தக் குறை இன்றுடன் நீங்கியுள்ளது.
 
அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்திலும், பெர்த்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 146 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.
 
மூன்றாவது டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டது.
 
இந்நிலையில் நான்காவது டெஸ்ட் டிரா ஆனதையடுத்து டெஸ்ட் தொடரை 2-1 என வென்றுள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று முதல் ஆசிய அணி என்கிற பெருமையும் கிடைத்துள்ளது.
 
2003-ல் 1-1 என டெஸ்ட் தொடரை சமன் செய்ததுதான் இந்திய அணி சமீபகாலமாக ஆஸ்திரேலிய மண்ணில் நிகழ்த்திய அதிகபட்ச சாதனை.
 
சச்சின், அனில் கும்ப்ளே, தோனி ஆகியோர் ஆஸி. மண்ணில் தோல்வியையே சந்தித்துள்ளார்கள். கங்குலிக்கு முன்பு சுனில் கவாஸ்கர், கபில் தேவ் ஆகியோர் டெஸ்ட் தொடர்களைச் சமன் செய்துள்ளார்கள்.
 
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்று முதல் ஆசிய அணி இதுவே. இதுவரை 12 டெஸ்ட் தொடர்களில் விளையாடிய இந்தியா 8-ல் தோல்வியடைந்து ஒரு தொடரை வென்றுள்ளது. 3 தொடர்கள் டிரா ஆகியுள்ளன.
 
 
 
பாகிஸ்தான் 12 டெஸ்ட் தொடர்களில் விளையாடி 9-ல் வெற்றி பெற்றும் 3 தொடர்களை டிரா செய்துள்ளது.
 
இலங்கை அணி அங்கு விளையாடிய 6 தொடர்களிலும் தோல்வியடைந்துள்ளது. அதேபோல வங்கதேசம் விளையாடிய ஒரே தொடரிலும் தோல்விதான் கிடைத்துள்ளது.
 
ஆஸ்திரேலிய மண்ணில் நிகழ்ந்த இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்கள்
 
1947-48: ஆஸ்திரேலியா 4, இந்தியா 0, டிரா 1
1967-68: ஆஸ்திரேலியா 4, இந்தியா 0, டிரா 0
1977-78: ஆஸ்திரேலியா 3, இந்தியா 2, டிரா 0
1980-81: ஆஸ்திரேலியா 1, இந்தியா 1, டிரா 1 (கேப்டன் – சுனில் கவாஸ்கர்)
1985-86: ஆஸ்திரேலியா 0, இந்தியா 0, டிரா 3 (கேப்டன் – கபில் தேவ்)
1991-92: ஆஸ்திரேலியா 4, இந்தியா 0, டிரா 1
1999-2000: ஆஸ்திரேலியா 3, இந்தியா 0, டிரா 0
2003-04: ஆஸ்திரேலியா 1, இந்தியா 1, டிரா 2 (கேப்டன் – கங்குலி)
2007-08: ஆஸ்திரேலியா 2, இந்தியா 1, டிரா 1
2011-12: ஆஸ்திரேலியா 4, இந்தியா 0, டிரா 0
2014-15: ஆஸ்திரேலியா 2, இந்தியா 0, டிரா 2
2018-19: ஆஸ்திரேலியா 1, இந்தியா 2
 
ஆஸ்திரேலியாவில் இதுவரை இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள் அணி, நியூஸிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய அணிகள் டெஸ்ட் தொடரை வென்றுள்ளன.
 
 
 
இந்திய அணி வெளிநாடுகளில் முதல்முறையாகத் தொடர்களை வென்ற பட்டியல்
 
நியுஸிலாந்தில் 3-1 என வெற்றி: தொடரின் இந்திய கேப்டன்
 
பட்டோடி – வருடம் 1967-68
மே.இ. தீவுகளில் 1-0: அஜித் வடேகர் – 1970-71
இங்கிலாந்தில் 1-0 : அஜித் வடேகர் – 1971
இலங்கையில் 1-0: அசாருதீன் – 1993
வங்கதேசத்தில் 1-0: கங்குலி – 2000-01
பாகிஸ்தானில் 2-1: கங்குலி/டிராவிட் – 2003-04
ஜிம்பாப்வேயில் 2-0: கங்குலி – 2005
ஆஸ்திரேலியாவில் 2-1: விராட் கோலி – 2018-19
 
இந்திய அணி வெளிநாடுகளில் விளையாடிய டெஸ்ட் தொடர்களில் இதுவரை தென் ஆப்பிரிக்காவில் மட்டுமே வெற்றி பெறாமல் உள்ளது.
 
தற்போது 10 அணிகள் 10 டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகின்றன. ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் மட்டுமே வெளிநாடுகளில் 9 அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளன.
 
இந்தியாவும் இங்கிலாந்தும் வெளிநாடுகளில் 8 அணிகளுக்கு எதிராக வென்றுள்ளன. இந்தியாவில் தென் ஆப்பிரிக்காவிலும் இங்கிலாந்து ஜிம்பாப்வே-யிலும் டெஸ்ட் தொடர்களை இதுவரை வென்றதில்லை.
 
வெளிநாடுகளில் விராட் கோலி பெற்றுள்ள நான்காவது டெஸ்ட் தொடர் வெற்றி இது. இந்திய கேப்டன்களில் கங்குலியும் வெளிநாடுகளில் நான்கு முறை டெஸ்ட் தொடர்களை வென்றுள்ளார்.
 
 
 
தொடர் நாயகன் விருது பெற்ற புஜாரா, இந்த டெஸ்ட் தொடரில் 1258 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 டெஸ்ட் தொடர்களில் வேறு எந்த பேட்ஸ்மேனும் இத்தனை பந்துகளை எதிர்கொண்டதில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்முறையாக தொடர் நாயகன் விருதை வென்றுள்ளார் புஜாரா.
 
ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர் நாயகன் விருதைப் பெற்ற இந்திய வீரர்கள்
 
ஸ்ரீகாந்த் (1985-86)
கபில்தேவ் (1985-86)
சச்சின் டெண்டுல்கர் (1999-00)
ராகுல் டிராவிட் (2003-04)
புஜாரா (2018-19)
 
 
ஆஸ்திரேலிய மண்ணில் நிகழ்ந்த இந்த டெஸ்ட் தொடர் வெற்றியின் முக்கியத்துவம் :
 
ஆசிய அணிகள் 31 முறை சுற்றுப்பயணம் செய்துள்ளன.
இதுவரை ஆசிய அணிகள் 98 டெஸ்டுகள் ஆஸ்திரேலியாவில் விளையாடியுள்ளன. 11 வெற்றிகளும் 66 தோல்விகளும் கிடைத்துள்ளன.
 
29 ஆசிய கேப்டன்கள் ஆஸ்திரேலியாவில் டெஸ்டை வெல்ல முயன்றுள்ளார்கள். அவர்கள் 8 பேருக்கு மட்டுமே டெஸ்ட் வெற்றி கிடைத்துள்ளது.
 
72 வருடம் கழித்து ஆசிய கேப்டன் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளார்.
 
அதிக டெஸ்ட் வெற்றிகளை அடைந்துள்ள இந்திய கேப்டன்கள் விவரம் வருமாறு :
 
எம்எஸ் தோனி – 27 வெற்றிகள் (60 டெஸ்டுகளில்)
விராட் கோலி – 26 வெற்றிகள் (46 டெஸ்டுகளில்)
எம்எஸ் தோனி – 21 வெற்றிகள் (49 டெஸ்டுகளில்)
 
வெளிநாடுகளில் அதிக வெற்றிகளை அடைந்த இந்திய கேப்டன்கள்
கங்குலி – 11 வெற்றிகள் (28 டெஸ்டுகளில்)
விராட் கோலி – 11 வெற்றிகள் (25 டெஸ்டுகளில்)
எம்எஸ் தோனி – 6 வெற்றிகள் (30 டெஸ்டுகளில்)
 
ஆசியாவுக்கு வெளியே அதிக வெற்றிகளை அடைந்த இந்திய கேப்டன்கள்
கங்குலி – 6 வெற்றிகள் (21 டெஸ்டுகளில்)
விராட் கோலி – 6 வெற்றிகள் (18 டெஸ்டுகளில்)
எம்எஸ் தோனி – 4 வெற்றிகள் (26 டெஸ்டுகளில்)
 
வெளிநாட்டு வெற்றிகளில் கங்குலியின் சாதனைகளைச் சமன் செய்துவிட்டார் விராட் கோலி. மொத்த டெஸ்ட் வெற்றிகளில் தோனியைத் தாண்ட இன்னும் 2 வெற்றிகளே போதும்.
 
வெளிநாடுகளிலும் ஆசியாவுக்கு வெளியிலும் கங்குலியின் வெற்றிகளைத் தாண்ட கோலிக்கு இன்னும் தலா 1 வெற்றியே தேவை. ஆனால் கங்குலியை விடவும் குறைந்த அளவில் விளையாடி இதைச் சாதித்துள்ளார் கோலி. எனவே இந்த இலக்குகளை அடுத்ததாக, மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் அடைந்துவிடுவாரா ..