ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அமைச்சர்கள் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக சர்ச்சை எழுந்தது.
 
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அபிராமபுரம் காவல் துறைக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.இதனிடையே பணப்பட்டுவாடாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாகவும் இவ்வழக்கை சிபிஐக்கு மாற்று மாறும் வைரக்கண்ணன் என்பவர் மனு தாக்கல் செய்தார்.
 
தேர்தல் காலங்களில் பணப்பட்டுவாடா தொடர்பான புகார்கள் வரும் போது இந்திய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக புதிய விதிமுறை வகுக்கக் கோரி ஆர்.கே. நகர் தொகுதி திமுக வேட்பாளர் மருதுகணேஷும் மனு தாக்கல் செய்தார்.
 
இவ்வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ராஜாமாணிக்கம் அமர்வு புகார் தொடர்பாக இணை ஆணையர் தலைமையிலான கண்காணிப்பில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.
 
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது பணப்பட்டுவாடா தொடர்பாக போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யப்பட்டு விட்டதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
 
முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யுமாறு நரசிம்மன் என்பவர் வழக்கு தொடர்ந்ததாகவும் அவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி ரமேஷ், நரசிம்மனின் கோரிக்கையை ஏற்று முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ததாகவும் அரசின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், இரண்டு நீதிபதிகள் அமர்வு முன்பு வழக்கு நிலுவையில் இருக்கும் போது, எப்படி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தீர்கள் என கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அரசு குற்றவியல் வழக்கறிஞர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் உத்தரவை பிறப்பித்தனர்.
 
இந்நிலையில் வருமான வரி சோதனை நடத்தி ஓராண்டான நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
 
மேலும் ஆர்கே நகர் தேர்தலின்போது ரூ.89 கோடி பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த பட்டியல் பறிமுதல் வழக்கில் எழுப்பப்பட்ட இந்த கேள்விக்கு வருமான வரித்துறை வருகிற டிசம்பர் 17ம் தேதிக்குள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
இதனிடையே விசாரணைக்கு உத்தரவிட்டும் போலீஸ் இணை ஆணையர் ஏன் விசாரிக்கவில்லை என்று டிசம்பர் 12ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 
மேலும் ஆர்.கே வழக்கு ரத்து செய்ததை எதிர்த்து அரசு ஏன் மேல்முறையிடு செய்யவில்லை ?
 
பணப்பட்டுவாடா வழக்கை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்த நரசிம்மன் யார்?
 
ரூ 89 கோடி பணப்பட்டுவாடா வழக்கு விசாரணையை கண்காணித்து அறிக்கை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என்று கேள்விகளை சரமாரியாக எழுப்பிய உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணை டிசம்பர் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.