ஆளும் பாஜக கட்சி நாங்கள் தான் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலை எழுதினோம், பிரதமர் மோடி தான் RRR படத்தை இயக்கினார் என கிரெடிட் எடுத்துக் கொள்ள வேண்டாம் என நாடாளுமன்றத்தில் மல்லிகார்ஜூன் கார்கே பேச்சால் சிரிப்பலை எழுந்தது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 95-வது ஆஸ்கர் விருதுகள் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்ஆர்ஆர் படத்தில் இடம்பெற்ற “நாட்டு நாட்டு” பாடல் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த பாடலை எழுதிய சந்திரபோஸ், இசையமைத்த இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோர் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.
கடந்த முறை ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜெய்ஹோ’ பாடலுக்காக ஏ.ஆர்.ரஹ்மான் ஆஸ்கர் விருதை வென்றார். அதன்பிறகு இப்போதுதான் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி விருது வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து இசையமைப்பாளர் கீராவணி உட்பட இசைக்குழுவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்திருந்தனர். மேலும் இன்று (14.03.2023) நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்திலும் ஆஸ்கர் விருது வென்ற இரண்டு படங்களுக்கும் உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்து பேசினர்.
இந்நிலையில் மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே பேசும்போது, “ஆஸ்கர் விருது பெற்ற ஆர்ஆர்ஆர் படக்குழு மற்றும் ஆவணப்பட தயாரிப்பாளர் இருவருக்கும் என் வாழ்த்துக்கள். இரண்டு விருதுமே தென் இந்தியர்களுக்கு கிடைத்த வெற்றி. அதில் அவர்கள் அதிகம் பெருமை கொள்வார்கள். நானும் பெருமை கொள்வேன். நீங்களும் பெருமை கொள்ளலாம்.
ஆனால் எனக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டும் உள்ளது. அதாவது, ஆளும் கட்சியான பாஜக நாங்கள் தான் பாடலை எடுத்தோம், நாங்கள் தான் பாடலை எழுதினோம், பிரதமர் மோடி தான் ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கினார் என கிரெடிட் எடுத்துக் கொள்ள வேண்டாம்” என கூறினார். அப்போது அவைத்தலைவர் உட்பட அனைத்து உறுப்பினர்களும் சிரித்தனர்.