ஆரியர்கள் வெளியிலிருந்து இந்தியாவுக்கு படையெடுப்பு வந்தவர்கள் அல்ல என்ற கருத்தாக்கத்தை ஐஐடி கரக்பூர் கல்வி நிறுவனம் தனது காலண்டரில் தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.
மேற்கு வங்காளத்தின் காரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ஐஐடி காரக்பூர்) 67வது பட்டமளிப்பு விழாவில் கடந்த டிசம்பர் 18 அன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்திய அறிவு அமைப்புக்கான சிறப்பு மையத்தை துவக்கி வைத்தார்.
இந்த சிறப்பு ஆராய்ச்சி மையம், இந்திய வரலாறு முதல் அண்டவியல் மற்றும் நிலை வானியல் வரையிலான களங்களில் இடைநிலை ஆராய்ச்சியை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்திய வரலாற்றின் காலவரிசையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு காலெண்டரை அதன் சாதனைகளில் ஒன்றாகக் கருதுகிறது.
ஆங்கிலேயர் ஆட்சியில் மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பாவின் தொல்லியல் ஆய்வுகளால் பண்டைய இந்தியாவின் நாகரிகம் முதல் முறையாக வெளியானது. அந்த ஆய்வில் திராவிடர்கள், ஆரியர்கள் என 2 முக்கிய இனங்கள் இந்தியாவில் வாழ்ந்ததாக ஆங்கிலேயர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் திராவிடர்கள் பூர்வகுடிகள், இவர்கள் மீது வெளியில் இருந்து வந்த ஆரியர்கள் படையெடுத்து விரட்டிய பின் இந்தியாவில் வாழ்வதாகவும் கூறப்பட்டது. இந்த தகவலே வரலாற்று நூல்களில் பாடமாகவும் உள்ளது.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் கரக்பூரிலுள்ள ஐஐடி 2022 ஆம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்டுள்ளது. அதில் 12 மாதங்களுக்கும் படங்களுடன் 12 ஆதாரங்களுடன் ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்கள் அல்ல என்ற கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்கு, ‘இந்திய ஆன்மிக அறிவு முறையில் அடிப்படை மீட்டெடுப்பு’ என்ற தலைப்பும் அளிக்கப்பட்டுள்ளது. இதில், வேதங்களின் ரகசியத்தை வெளிப்படுத்துவன என ஹரப்பா நாகரிகத்தை பற்றியக் குறிப்புகள் உள்ளன. ஒன்றிய அரசின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமான இதன் திட்டம் மற்றும் கட்டிடவியல் துறை மூத்த பேராசிரியர் ஜாய்சென் தயாரிப்பில் இந்த காலண்டர் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் ஜாய்சென் கூறும்போது, “இந்திய நாகரிகத்தின் தற்போதைய காலவரிசையை கேள்விக்குட்படுத்தும் வகையில், 2022 ஆம் ஆண்டிற்கான ஐஐடி காரக்பூர் காலண்டரை வடிவமைத்துள்ளோம். அது பண்டைய வரலாறு அடக்குமுறை, சமரசங்கள், சுருக்கங்கள் மற்றும் சிதைவுகளால் பாதிக்கப்பட்டதை கேள்விக்குள்ளாக்கும்.
சிந்து சமவெளி நாகரிகம் வேதகாலத்துக்கு முந்தியதா அல்லது வெற்றி பெற்றதா என்பது குறித்து காலண்டரில் ஒருபோதும் கவனம் செலுத்தவில்லை. ஆனால் இனம் மற்றும் மரபியல் அடிப்படையில் ஆரிய படையெடுப்பு இல்லை என்பதை நிரூபித்துள்ளது.
ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்பது காலனி ஆதிக்கத்தில் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட கருத்து, இதற்கு அவர்கள், சம்ஸ்கிருதம் மற்றும் ஐரோப்பிய மொழிகளுக்கு இடையே உள்ள ஒற்றுமையை ஆதாரமாக்கினர்.
ஆரியர்களும், திராவிடர்களும் இந்தியாவின் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆன்மிகபிரிவினர். இதில் குரு பரம்பரையை சேர்ந்த மூத்தவர்களான திராவிடர்களை அவர்களது சிஷ்யப் பரம்பரையாக வளர்ந்த ஆரியர்களுடன் பிரித்து பார்ப்பது தவறு” என்று விளக்கம் அளித்துள்ளார்.
இருப்பினும் உண்மை ஆதாரங்கள் இல்லாமல், இந்திய வரலாற்றை ஒருதலைபட்சமாக மறுமதிப்பீடு செய்யும் ஐஐடி-யின் இந்த செயலை வரலாற்றாசிரியர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர்.
புத்தர், அரவிந்தர், விவேகானந்தர் போன்ற ஆன்மிகத் தலைவர்களின் கருத்துக்களுடன் காலண்டரின் படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதை பார்த்த பலர் காலண்டரின் கருத்துகள் தவறு எனவும் மறுப்பு தெரிவிக்கின்றனர்.
மும்பை ஹோமி பாபா அறிவியல் கல்வி நிறுவன பேராசிரியர் அங்கித் சுலே கூறும்போது, “ஆரியர்கள் படையெடுப்பு எனும் கருத்து 50 ஆண்டுக்கு முன்பாகவே மரணித்து விட்டது. இந்த காலண்டரை தயாரித்தவர்களுக்கு இந்தியவியலின் ஆய்வுகளில் நடப்பது என்ன என்று தெரியவில்லை” என்றார்.
டெல்லி பல்கலைக்கழக வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர் பேராசிரியர் டி.கே.வெங்கட சுப்பரமணியம் கூறும்போது, “காலண்டரை மேலோட்டமாக பார்த்ததில், ஆன்மிகவாதிகளும், தேசியவாதிகளும் கூறிய கருத்துகள் தேசியவாத விழிப்புணர்வாக கூறப்பட்டுள்ளது. உதாரணமாக விவேகானந்தர், தேசியவாதம் மற்றும் ஆன்மிகவாதத்தையும் கலந்து கூறியகருத்து பாஜகவுக்கு பொருந்துவதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஆரியர்களும் இந்தியர்களே எனும் கருத்தை வலியுறுத்தும் முயற்சி பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. இதை எதிர்ப்பவர்கள் அதிகமாக இருப்பினும், ஆதரிப்பவர்களும் கணிசமாக எண்ணிக்கையில் உள்ளனர். குறிப்பாக இந்த ஆய்வுகள் ஒன்றிய அரசில் பாஜக இருக்கும் போது மட்டும் அதிகமாகின்றன.
பிரதமராக வாஜ்பாய் இருந்த போது அமெரிக்கவாழ் இந்தியர் ராஜாராம் என்பவர் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. அவர் திராவிடர்களின் சிந்து சமவெளி நாகரிகத்தில் கிடைத்த முத்திரையில் இருப்பது காளை அல்ல குதிரை என நிரூபிக்க முயன்றது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, 2022 ஆம் ஆண்டுக்கான காலண்டரில் ஐஐடி கரக்பூர் கல்வி நிறுவனம் வெளியிட்டது. ‘இந்திய அறிவுசார் அடித்தளங்களை மீட்டெடுப்பது’ என்ற பெயரிடப்பட்ட இந்த நாட்காட்டியில், பொய்யான ஆரியப் ஆக்கிரமிப்புக் கொள்கை, சிந்து சமவெளி நாகரிகம் மறுவாசிப்பு, வேதங்கள் சொல்லும் ரகசியத்தை உணர்தல் உள்ளிட்ட பல தலைப்புகள் இடம்பெற்றுள்ளது.