சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரட்டை குழந்தைகள் உயிரிழப்பு
சென்னை:
சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இரட்டை குழந்தைகள் தற்போது உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு பக்கம் டெங்கு காய்ச்சல், மறுபக்கம் பன்றிக் காய்ச்சல் என மர்ம காய்ச்சல்கள் வேகமாக பரவிவருகிறது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஏராளமானோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இதற்கு காரணம் டெங்கு காய்ச்சல் என்பது தெரியவந்துள்ளது. ஆனால் மருத்துவமனை தரப்பில் இருந்து எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. சென்னை மாதவரத்தைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரின் 7 வயதான இரட்டைக் குழந்தைகள் தக்ஷன் மற்றும் தீக்ஷா. கடந்த 10 நாட்களாகவே காய்ச்சல் காரணமாக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களுக்கு ரத்த பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு தனி வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 7 மணியளவில் அவர்கள் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
எனினும் குழந்தைகளின் உடல்களை தற்போது வரை பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை. இந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்பு குறித்து காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்படாத காரணத்தால் மருத்துவமனை நிர்வாகமானது சுகாதாரத்துறை அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனவே டெங்கு காய்ச்சல் என்ற பெயர் வெளியே வராமல், உடல்நலக்குறைவு காரணமாகவே குழந்தைகள் உயிரிழந்ததாக கூறி இதனை மூடி மறைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.