கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் 6 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஆசிரியர்கள், அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று நேற்று தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
சென்னை,
தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
31.5.2009-க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாக பணியில் சேர்ந்தவர்களுக்கும், 1.6.2009-க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதியத்தில் வித்தியாசம் இருப்பதாகவும், அந்த ஊதிய முரண்பாடுகளை களைந்து ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்றும் கோரி, 1.6.2009-க்கு பிறகு பணியில் சேர்ந்த 21 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 2016-ம் ஆண்டில் இருந்து அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஒவ்வொரு முறை போராட்டம் நடத்தும் போதும், கோரிக்கை தொடர்பாக அரசு அளிக்கும் வாக்குறுதியை நம்பி, அவர்கள் போராட்டத்தை கைவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும், எனவே கோரிக்கை நிறைவேறும் வரையில் போராட்டத்தை கைவிடுவது இல்லை என்றும் கூறி, இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் கடந்த 24-ந் தேதி முதல் இரவு-பகலாக உண்ணாவிரதம் இருந்து வந்தனர். இந்த உண்ணாவிரத போராட்டம் நேற்று 6-வது நாளாக நீடித்தது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், திரைப்பட இயக்குனர் கவுதமன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை நேற்று நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
தொடக்கக் கல்வி துறை இயக்குனர் கருப்பசாமியுடன், இடைநிலை ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அதில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை.
இந்த நிலையில், நேற்று இரவு 9 மணி அளவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், பள்ளி கல்வித்துறை இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் ஒன்றை அளித்தனர்.
இதுதொடர்பாக, பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தைச் சார்ந்த, ஜூன் 2009-ம் ஆண்டில் இருந்து பணியில் சேர்ந்து பணிபுரிந்து வரும் இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஊதிய முரண்பாடு இருப்பதாக தெரிவித்து 24-12-2018 முதல் இன்று (அதாவது நேற்று) வரை டி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பிற துறைகள் மற்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பான ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைய ஒரு நபர் ஊதியக் குழு அமைக்கப்பட்டு குழுவால் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. அறிக்கை பெறப்பட்ட பின்புதான் இவர்களது கோரிக்கைக்கான தீர்வு குறித்த முடிவு தெரியவரும்.
அதன்பின்பு பள்ளி கல்வித்துறை இப்பொருளில் மேல் நடவடிக்கை எடுக்கும். எனவே, ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து, தமிழக அரசின் வாக்குறுதியை ஏற்று உண்ணாவிரத போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் வாபஸ் பெற்றனர்.
இது குறித்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 6 நாட்களாக தமிழகமே, ஏன் இந்தியாவையே திரும்பிப்பார்க்கும் வகையில் போராட்டத்தை இடைநிலை ஆசிரியர்கள் துணிந்து நடத்தினார்கள்.
அந்த அளவுக்கு வேதனையில் நாங்கள் இருந்தோம். ஜனவரி 7-ந் தேதி நீதிமன்றத்தில் அரசு அளிக்கும் அறிக்கையில் நல்ல முடிவு இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.
ஆனால், 24-ந் தேதி எங்களை அழைத்து பேசிய அரசு அதிகாரிகள், கோரிக்கைக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அதனால், போராட்டத்தை தொடர்ந்தோம். இதுவரை, 245 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 45 ஆசிரியர்களுக்கு இங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. போராட்டத்தின் ஒவ்வொரு நாள் இரவையும் மரண பயத்துடனே இங்கே கழித்தோம்.
இந்த நிலையில், முதல்- அமைச்சர், பள்ளி கல்வித்துறை அமைச்சர், அதன் முதன்மை செயலாளர், இயக்குனர் ஆகியோர் வரும் 7-ந் தேதிக்குள் பள்ளி கல்வித்துறை சார்பில், மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்து உள்ளனர். அரசின் இந்த முடிவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
நாங்கள் மீண்டும் சென்னைக்கு வரும்போது அது அரசுக்கு பாராட்டு விழா நடத்துவதாக இருக்க வேண்டும். எங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கிறோம். 7-ந் தேதிக்குள் அரசு எடுக்கும் முடிவை பார்த்துவிட்டு, மேற்கொண்டு போராட்டத்தை தொடருவது குறித்து முடிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.